பக்கம்:கொடி முல்லை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

13

கீழ்வானை இருள்விழுங்கக் கண்டான் வன்மன்;
'கிளிமொழியே!' எனவெழுந்தான்; மலையின் உச்சி
தாழ்கின்ற செம்பரிதி பார்த்த வண்ணம்
தமிழ்மறவன் மானவன்மன் சொல்வான்: 'என்றன்
யாழ்நீ! நான் அதைமீட்டும் நாளெந் நாளோ?
யாக்கைநிலை யற்றதடி விரைவோம்’ என்றான்.
தாழ்குரலில் 'எனை மறந்து விடுவீர் வேந்தே!
தடியடியால் காய்பழுப்ப தில்லை!' யென்றான்.

'இதை உன்வாய் சொல்லுவதோ? நீயும் நானும்
இளமைமுதல் சேர்ந்திருத்தோம் வீட்டிற் குள்ளே;
புதுப்பாவை தேர்ஏற்றி இழுத்தோம்; ஆடும்
பொன்னூசல் மீதிருந்தோம்; நீயே என்றன்
முதுகினிலே கிள்ளிப்பின் சிரித்தாய்; நானோ
முல்லைப்பூ மாலையையுன் கழுத்தி லிட்டேன்:
சிதைக்கின்றாய் என் இன்பக் கோட்டை எல்லாம்;
மறுமுறையும் இப்படிநீ செப்பேல்' என்றான்.

தலைகுனிந்து நின்றிருந்தாள் முல்லை. குன்றைத்
தகர்தோளான் விடைபெற்றான்; நடக்க லுற்றான்;
கலகலென உலகப்பெண்னுடனே இங்குக்
களித்திருந்து வீட்டையும் பரிதி போலச்
சிலைவழியை மானவன்மன் திரும்பிப் பார்த்தான்;
நிற்கின்றான்; அடியெடுத்து வைக்கின் றான்பின்;
வலைப்பட்ட மீனொப்ப அவன் மைக் கண்ணில்
அகப்பட்ட மனமடக்கி நடந்திட் டானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/19&oldid=1252893" இலிருந்து மீள்விக்கப்பட்டது