பக்கம்:கொடி முல்லை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

27


தேனுண்டோ மலர் இன்றேல்? இன்பம் சேர்க்கும்
குளிர்நிலவு கதிரின்றேல் உண்டோ? இங்கு
நானுண்டோ நீஇன்றேல்?' என்றான் தச்சன்
கொடிமுல்லை 'நாம் எதிர்த்து வாழ்வோம்’ என்றாள்.

தலைகாலே தெரியாது காத லர்கள்
தனித்தமிழின் இன்பத்தைத் துய்ப்பார் போல
நிலையற்றுக் கிடந்தார்கள் தோட்டத் துள்ளே!
கொடிமுல்லை 'நீர் இங்குச் செதுக்கு கின்ற
கலைக்கோயில் நிலைஎனக்குச் சொல்வீர், என்றாள்.
'மலைசெதுக்கிக் கற்கோயில் ஐந்து செய்தேன்;
சிலைவிழியே! உன்னுருவை அவற்றி லொன்றில்
சீர்பெறவே வைத்திடுவேன்; அழியா' தென்றான்

படுக்கையிலே துயிலாது மான வன்மன்
படுத்திருந்தான்; நள்ளிரவில் எழுந்தி ருந்தான்;
அடிமேலோர் அடிவைத்து முல்லை தூங்கும்
அறைநோக்கித் தோட்டத்தைக் கடந்து வந்தான்;
குடிகாரர் பொலங்குப் பேசிப் பேசிக்
கூத்தடிக்கும் இருவரையும் கண்டான்; ஆலின்
அடிமரத்தின் நீழலிலே பதுங்கி நின்றான்;
அனற்கண்ணால் இமைக்காது பார்த்தி ருந்தான்.

நின்றொற்றுக் கேட்டிருந்தான் மான வன்மன்.
'நெடுந்தோள! என்னுருவைக் காணும் நன்னாள்
என்?' றென்றாள் கொடிமுல்லை. அழகன் சொல்வான்;
'எழுகின்ற கலைக்கோயில் அருகி லுள்ள
குன்றினிலே ஒருகுகையில், அடடா! உன்றன்
குறுநகையும் சேல்விழியும் தோன்ற நீயே
நின்றிருப்ப தைப்போலச் சிலைசெய் துள்ளேன்;
நீவந்தால் நாளைக்கே பார்ப்பாய்!' என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/33&oldid=1253071" இலிருந்து மீள்விக்கப்பட்டது