பக்கம்:கொடி முல்லை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

37


தங்குபுகழ் மாமல்லன் சீறிச் சொல்வான்;
"யாவையுமே சரியென்று பொறுத்திட்டாலும்
எங்களரும் குடிப்பெயரைக் கறையே செய்தான்;
'ஈதென்ன புதுமை?' என்பீர், என்றன் வாயால்
உங்கள் முன் சொல்வதற்கே கூசும் உள்ளம்;
உயர்சாதி என்பதையும் மறந்து தீயோன்
எங்களரும் கொடிமுல்லை அறிவை மாய்த்தான்;
இவனுக்கா இரங்குவது? கழுவே" என்றான்.

தலைதாழ்த்தி இருந்திட்டார் அவையில் உள்ளோர்;
தமிழ்ப்புலவன் நலம்பாடி எழுந்தான்; சொல்வான்;
'அலைமோதும் பல்லவநாட்டரசே! நீவிர்
அறியாத திங்குண்டோ? காத லுக்குத்
தொலைதுாரம் சாதிமதம்; அரசன், ஆண்டி,
சொக்குமெழில் இவ்வுலகில் ஆணும் பெண்ணும்
தலைப்பட்டுக் களவுவழி இன்பம் துய்க்க
யார்குற்ற வாளியென்று சாற்றப் போமோ?

'நல்விருப்பம் இருவருக்கும் இன்றேல் பேசும்
நாட்டத்திற் கெத்தொழிலும் இல்லை; பூண்ட
பல்வளையல் கழன்றோடி வீழ்வ தில்லை;
இரவெல்லாம் படுக்கையிலே புரள்வ தில்லை;
சொல்லில்லை; ஊடலில்லை; ஊடிப் பின்னர்த்
தோளோடு தோள்பின்னும் செய்கை இல்லை!
பல்லவனே! காதலர்கள் நிலைஅ றிந்தும்
பழிஅழகன் மேல்சொல்ல வெண்டாம்' என்றான்.

என் இச்சை போலெதையும் செய்வேன்; யாரும்
எனைத்தடுக்க உரிமையில்லை; இன்று மாலை
கொன்றொழிப்பீர் கழுவேற்றி, தச்சன் செய்த
குற்றத்திற் கொருநொடியும் கருணை இல்லை’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/43&oldid=1253094" இலிருந்து மீள்விக்கப்பட்டது