பக்கம்:கொடி முல்லை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கொடிமுல்லை


என்றிட்டான் மாமல்லன். அந்த வேளை
இறகொடிந்து பறந்து வரும் மயிலைப் போல
நின்றிருந்த கூட்டத்தை விலக்கி வந்து
கொடிமுல்லை நெடுமரம்போல் வீழ்ந்தாள்; சொல்வாள்;

'கற்றவரே! அவையோரே! தான்வ லிந்து
கைக்கொண்டேன் அவருறவை; இதுவே உண்மை!
குற்றத்தைச் செய்தவளும் நானே ஆவேன்;
குடிப்பெயரை அழித்தவளும் நானே ஆவேன்;
கற்றச்சர் செய்தபிழை ஒன்று மில்லை;
கருணைசெய்வீர், இன்றேல்என் உயிரை மாய்ப்பீர்!
குற்றத்தைச் செய்தவருக் குரிய தீர்ப்பைக்
கொடுப்பதுவே தமிழரசர் முறையாம்!' என்றாள்.

நலம்பாடி எழுந்திருந்தான்: "அரசே! நேற்று
நடந்தவற்றிற் கச்சாணி நானே; உங்கள்
தலைமகளாம் கொடிமுல்லைப் புறாவைக் கள்ளத்
துாதுவிட்டேன் தமிழ்க்கலைஞன் நிலையைக் கண்டு;
கலைஅரசன் இதையறியான்; அன்று மாலை
'கையோடே கொடிமுல்லை அழைத்தாள்' என்று
சிலைவிழியாள் அல்லிவந்தாள்; அழைத்துச் சென்றாள்
தீம்பழத்தை வெறுத்துண்ண மறுப்பார் உண்டோ?

"காதலுக்குக் கொடிமுல்லை இணங்க வில்லை;
கட்டாயப் படுத்தியவள் தோளைச் சேரப்
பாதகனாம் மானவன்மன் வந்தான்; இன்பக்
காதலரைப் பார்த்திட்டான்; பதுங்கி நின்றான்.
ஈதெல்லாம் நானறிவேன்; தொடர்ந்தேன்; ஆடை
இழந்தவன்கை போலவரைக் காத்தேன்; வன்மன்
சூதாக அழகன்மேல் பாயும் வேளை
தோன்றினேன் முகமூடி உருவில்" என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/44&oldid=1253095" இலிருந்து மீள்விக்கப்பட்டது