பக்கம்:கொடி முல்லை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

41


மாடத்தில் எரிகின்ற அகல்வி ளக்கின்
மருங்கினிலே தன்பெயருக் கெழுதி வைத்த
ஏடொன்றைப் பார்த்திட்டான்; ஏட்டைத் தூக்கி
எரிகின்ற அகற்றிரியைத் துண்டி விட்டான்.

'என்னோலை நீகாணும் இந்த நேரம்
இறந்திருப்பேன் கழுவினிலே; கலங்கேல் நண்பா!
உன்காதற் கொடிமுல்லைப் பெண்ணும் நீயும்
ஊரைவிட்டு நள்ளிரவில் தப்பிப் போவீர்;
உன்வருகைக் காகஅவள் கடலோ ரத்தே
உயர்பனையின் கீழ்க்காத்து நிற்பாள்; செல்க!'
என்றெழுதி இருந்த அந்த ஒலை கண்டான்;
'இறந்தாயோ?' எனக்கதறித் தரையில் வீழ்ந்தான்!

கண்விழித்தான் சிறுநேரம் சென்று தச்சன்;
கனாப்போலத் தோன்றிற்று நடந்த யாவும்;
மண்விளக்கின் ஒளியினிலே மீண்டு மந்த
வளைந்தசுருள் ஒலையினைப் படித்துப் பார்த்தான்;
‘மண்மீது நீயன்றி எனக்குக் காதல்
வாழ்வேனோ?' எனத்தலையில் அறைந்து கொண்டான்;
பெண்ணுலகே வெற்றிகொள்ளும் காளை நெஞ்சை!
அழகன்மேல் பிழைபேசல் முறைதான் ஆமோ?

கடற்கரையே நோக்கியவன் மனமும் காலும்
ஓட்டத்தில் போட்டியிடும்; கடிக்கப் பாய்ந்து
படமெடுத்துச் சீறுகின்ற பாம்பை யொத்த
அலைமோதும் மணற்பரப்பில் பனையைக் கண்டான்;
'கொடிமுல்லை! கொடி முல்லை!' என்று சுற்றிக்
கூப்பிட்டான்; பதிவில்லை! அங்கும் இங்கும்
துடிதுடித்துப் பாய்ந்தழகன் ஒடிப் பார்த்தான்;
காலிடறித் தொப்பென்று மணலில் வீழ்ந்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/47&oldid=1253098" இலிருந்து மீள்விக்கப்பட்டது