பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

15


விதிகள் பல மாதிரிகளில் இருந்தாலும், முறைகளில் பல மாற்றங்கள் இருந்தாலும், கோகோ ஆட்டத்தின் அடிப்படைத் தத்துவம் மாறாமல் எப்பொழுதும் இருந்துவந்ததால், ஆட்டத்தில் ஆர்வமுள்ளவர்கள் ஒன்று கூடி, கோகோ ஆட்டத்தை அழகுபட தெளிவாக மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன் பயனாக, 1914-ம் ஆண்டு பூனாவில் உள்ள டெக்கான் ஜிம்கானாவின் உதவியால், ஏற்படுத்தப்பட்ட துணைக்குழு. முதன் முதலாக விதிமுறைகளை உருவாக்கித் தந்தது. இதனால், ஆங்காங்கே அவரவர் விருப்பம்போல் ஆடிய முறைகள் களைந்தெறியப்பட்டு ஒரு பரிபூரண நிலையானது உருவாகத் தொடங்கியது.

இதன் காரணமாக, ஆட்டம் வளர்ச்சியடைகின்ற நல்லதொரு சூழ்நிலை இந்தியாவிலே தோன்றத் தொடங்கியது. விறுவிறுப்பும் விநயமும் கொண்ட இந்த ஆட்டம், இன்னும் விரைவாகவும் நிறைவாகவும் மாறவேண்டும் என்ற மனப்பான்மை, ஆட்ட வல்லுநர்கள் மத்தியில் மட்டுமல்லாது, மக்கள் மத்தியிலும் பரவத் தொடங்கியது.

விதிகள் உருவான பின்னர், பாரதத்தின் பல்வேறு பாகங்களிலுள்ள ஆட்ட ரசிகர்களும், ஆட்ட வல்லுநர்களும் தங்களுடைய உள்ளார்ந்தக் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதனால் என்ன பயன் விளைந்ததென்றால், கோகோ ஆட்டம் மேலும் வளர்வதற்குரிய வாய்ப்பாக, இரண்டாம் முறையாக அதாவது 10 ஆண்டுகள் கழித்து 1924-ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக விதிமுறைகளை மாற்றி அமைத்தனர். இதற்கு பரேடாவைச் சேர்ந்த எச்.வி.ஜிம்கானாவின் உதவி மிகுதியாகக் கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/17&oldid=1377520" இலிருந்து மீள்விக்கப்பட்டது