பக்கம்:கோகோ ஆட்டம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

கோகோ ஆட்டம்


நேரக் கட்டுப்பாட்டுடன் ஆட்டக்காரர்களைத் தொட்டு வெளியேற்ற வேண்டும் என்ற விளையாட்டுக் களில், சடுகுடு, கோகோ போன்றவற்றில், மிகக் குறைந்த நேரம் கொண்டது கோகோ ஆட்டமாகும்.

எதிர்க்குழு ஆட்டக்காரர்களைத் தொட்டு வெளியேற்றும் எண்ணிக்கையை அதிகமாக்கிக் காட்டுவது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்குத் தன் குழுவினர் அதிகமாகத் தொடப்படாமல் ஆடிக்காட்ட வேண்டும் என்பதுவும், கோகோ ஆட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் ஆகும்.

ஆட்டத்திற்காகக் கொடுக்கப்படுகின்ற ஏழு நிமிடமும் பொன்னான நேரமாகும். அதிலும் குறிப்பாக, விரட்டித் தொடுகின்ற குழுவினருக்கு ஒவ்வொரு வினாடியும், விலை மதிப்பற்ற நேரமாகும். ஒரு சிறு நொடியையும் வீணாக்காத குழுவே இறுதியில் வெற்றி பெறத்தக்க குழுவாகிறது.

ஆடும் பொழுதே களைத்துவிடுவதால் அல்லது சோம்பலால் அல்லது முடிவு எடுப்பதில் தாமதம் செய்துவிடுவதால், வெற்றிக்குரிய வாய்ப்பையே இழந்த குழுக்கள் எண்ணிக்கையில் ஏராளமாகும்.

கடைசி வினாடி வரைக்கும் கடுமையாக விடா முயற்சியுடன் விவேகத்துடன் ஆடுவதுதான் கோகோ ஆட்டத்தின் சிறப்பாகும். கண்ணாக நேரத்தைப் போற்றிக் காப்பாற்றிக் கொண்டு ஆடும், விளையாட்டு வீரர்கள், முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில் மிக விரைவாக, நேரத்தை வீணாக்காமல் முடிவு எடுக்க வேண்டும் என்பது மிக முக்கியம் என்பது சொல்லாமலே விளங்குகிறதன்றோ !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோகோ_ஆட்டம்.pdf/66&oldid=1377499" இலிருந்து மீள்விக்கப்பட்டது