பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

107

சொல்ல வாரா! அறிவு இருக்காடி உனக்கு? அவ உழவோட்டினா கூலி குடுத்திட்டுப் போ! அதுக்கு மேல அவனுக்கென்ன சரிகக் கோடு போட்ட வேட்டி, சட்ட, துப்பட்டா விளக்குமாறு? அருமயா அண்ணா, அண்ணி, அவம்புள்ளங்க வந்திருக்கு. அதுக்கு ஒரு பார்வயா நல்லது செய்ய உனக்குத் தோணல. என்னமோ பொண்ணக் கட்டின மருமவங் கோவிச்சிட்ட மாதிரி ஒடுறா துடப்பக்கட்ட...”

“ந்தாம்மா, ரொம்பப் பேசாத நா அவனியே மருமகப் புள்ளயா ஆக்கிக்குவே! உன்னப் போல நன்னிக் கொன்ன ஆளில்லே நா! உம்புள்ள, மருமவ என்ன செஞ்சா ஒரு தல முழுவி, வெளக்கேத்தி பொங்கக் கும்புட முடியாதவ எதுக்கு வந்தா? கிராமத்துல இப்படி இருக்கும்னு தெரியுமில்ல? இல்லாட்டி இவரு வந்து பத்தாயிரம் செலவு பண்ணி அம்மா வந்திருக்கத் தோதா குழா போட்டு, மேடப் போட்டு அலமாரி போட்டு கட்றது? நானா வாணாங்கறேன்? அஞ்சு வருசமா கொல்ல மேட்டுல ஒழுங்கா சாகுபடி இல்ல. ஒரு கேவுறு கூட இந்த வருசம் வெதய்க்கல. நாதி இல்ல. இவிரு கலியாணத்துக்குத்தான கிணத்துப் பாசன நிலத்த ஒத்திக்கு வச்ச? அதையேனும் அடச்சாரா, இத்தினி வருசத்துல? அவ நகை போட்டுட்டு மினுக்குறா, ஏன் சொல்லுறதான புள்ளகிட்ட?”

இவளுக்கு ஆற்றாமை பொங்குகிறது. சொற்கள் பொல பொல வென்று வருகின்றன.

ஆனால் அம்மாவோ. ஆம்பிளப் பிள்ளையைப் போல் இவள் பேசுவதா என்று மேலே இருந்து விரட்டுகிறாள்.

"ஏய், நீ இப்படிப் பேசுறதுன்னா, இப்பவே வூட்டவிட்டுத் தனியாப் போய்க்க. பூமி அவனோடது. அவன் போடுவா, அழிப்பா. இன்னைக்குத் தேதில அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அவனால சோறு போட முடியும். வித்துப் போட்டு ஊரோட வந்திருங்கன்னுதான் இப்பவும் சொல்லிட்டுப் போச்சி! அப்பாவுக்கும் அங்க வந்தா, நல்ல டாக்டர்ட்ட காட்டி வைத்தியம் பண்ணுறன்னு, வூடு கட்டியிருக்கு. கிரக பிரவேசம்னு வைக்கல. சாங்கியமா பால் காச்சி சாப்பிட்டுட்டு டூசன் பசங்க வரதுக்குத் தோதா தெறந்து