பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

127

“கன்னிப்பா, இங்கமின்னப் போல, கொஞ்சம் காக்காணி, நெல்லும் போடுவம். தண்ணி பட்டாளத்துக்காரரு தருவாரு. அந்த மண்ணுல நவரைப்பட்டமா வேர்க்கடலை போடுறது. அதுக்கு அப்பா லோன் எடுத்துத்தருவாங்க. அன்னைக்கு அந்த மாநாட்டுல அஞ்சல அம்மான்னு ஒருத்தர் சொன்னாங்க. பயிரை மாறி மாறிப் போடணும்னு நெல்லு விதச்ச இடத்துல கடலை போடுவோம்.”

“சரிங்கக்கா....”

இவள் கூடையில் பிளாஸ்டிக் பை மண்ணைப் பத்திரமாக வைத்துக் கொள்கிறாள். வீட்டுக்குச் சென்றதும் சர்வே நம்பர், விலாசம் எழுதிக் கட்டி ஆபிசில் கொண்டு கொடுக்க வேண்டும்...

அவர்கள் கிளம்புமுன் பட்டாளக்காரர் கூப்பிடுகிறார். “செவந்தியம்மா! வாங்க!”

“என்ன அப்படி சொல்லாம கொள்ளாம போறீங்க, செய்யிறத எல்லாம் செஞ்சி போட்டு?”

“சடையா, பூசைசாமானெல்லாம் எடுத்துவையி.”

கிணற்றடியில் ஓர் இலைப்பரப்பி, அதில் பொரிகடலை, பழம் வெல்லம் வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள். கேணித் தண்ணிர் ஒரு செம்பில். உள்ளே இருந்த இரு ஆட்களும் வெளியே வந்திருக்கிறார்கள். சடையன் என்று பெயர் கொண்ட ஆள், அவற்றைப் பூமிக்கும் வானுக்கும் நீருக்கும் படைக்கிறான்.

"சாமி, தண்ணியும் பூமியும் மானமும் எங்களுக்கு என்னைக்கும் பக்க பலமா இருக்கணும்... பொங்கிப் பொழியணும். நல்லா வைக்கணும். ஊரு உலகம் சுபிச்சமாகணும்...”

எல்லோரும் கும்பிட்டு நிற்கிறார்கள்.

வெல்லமும் பொரியும் கடலையும் நெஞ்சமெல்லாம் அன்பாய்ப் பரவுகின்றன.