பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

கோடுகளும் கோலங்களும்

"அக்கா, திரம் மருந்து எவ்வளவு போடணும்? தீப்பெட்டிலதான அளந்து போடணும் ? மாமா இல்லேங்கறாரு... அக்கா நீங்களே வந்து காட்டுங்கக்கா...”

இவள் கை வேலையாக இருப்பாள். பொழுது போயிருக்கும். மீசைக்காரர் வாயிலில் நிற்பார். சிநேகங்களில் இப்படிச் சிறு சிறு முட்கள் இருக்கத்தான் இருக்கின்றன. என்றாலும் அம்மா அவர்கள் சாதியைப் பற்றிய குத்தலைப் பேச்சில் இழையோட விடுவது ரசிக்கும்படி இல்லை.

எலும்பில்லா நாக்கு எதுவும் பேசும். அப்படி அந்தத் தெரு பேசும் என்பதில் சந்தேகமில்லை. வீட்டுக்குள், அந்தத் தெரு உறவுகளில் அரச பொரசல் விழுந்து விட்டது. அவர் பணம் கொடுத்திருக்கும் செய்திக்கும் கண் மூக்கு காது முளைத்திருக்கும்.

"ஏம்பா, நேத்துத்தான பார்த்தன். நல்லாதான இருந்திச்சி? என்ன சேதி இப்ப?”

“அங்க ஓரிடத்தில நட்ட பயிரில வைரஸ் நோய் வந்திருக்குமோன்னு பயப்படுறாரு. மோனாகுரோட்டபாஸ் அடிக்கணும்னு விவசாய ஆபிசில சொன்னாங்களாம்...”

“நிசமாலுமா? நீதா பெரி அனுபவமுள்ள ஆளாச்சே? நோயா வந்திருக்கு?”

"இல்லிங்க வேப்பம் புண்ணாக்கு யூரியாவில் கலந்து வச்சா சரியாப் போயிடுங்க. கொஞ்சம் அந்த எடத்தில குத்து கம்மியாக இருந்திச்சி. ரெண்டு நாக்கழித்து அந்தப் பொண்ணு வந்திச்சி. ஆபீசிலேந்து கத்தையா நோட்டீசு வாங்கிப் படிச்சிட்டு ஒண்ணொண்ணாப் பாக்குறாரு...” என்று சிரிக்கிறான்.

“இப்ப வாரதுக்கில்ல. வேலை முடிச்சிட்டோ, பொழுதோடயோ வந்து பாக்குறேன்னு சொல்லப்பா. யூரியாவும் வேப்பம் புண்ணாக்கும் கலந்து அடுத்த வாரம் வைக்கணுமில்ல... நீ ஒன்னு செய்யி. என்ன வுட சாந்தி அனுபவப்பட்டவ. அவங்க வூடும் இவ்வளவு தொலுவில்ல. அவளைக் கூப்பிட்டுக் காட்டு” என்று அனுப்புகிறாள்.