பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

கோடுகளும் கோலங்களும்


கலியாணம் நடந்திருக்க வேண்டியது. வூடு தேடி வந்து பொண்ணு கேட்டாரு. அவர ஏசி அனுப்பிச்சிட்டு, இந்தப் பாவி எவனையேனும் கட்டிட்டு சொத்தப் பிரிசிட்டுப் போயிடுவான்னு; அவ பங்குக்கு ஒண்ணுமில்லாம இவப்பனே எழுதிட்டா.. அந்தப் பாவம் என்னிக்கின்னாலும் தலை மேலதா தொங்கிட்டிருக்குங்குறத மறந்திடாதே!”

கொல்லென்று அமைதித் திரை படிகிறது.


20


யசுப் பெண்ணைத் தனியாகப் பஸ்ஸில் அனுப்புவது, ஆண் பிள்ளைகள் பழக இடமுள்ள கல்லூரியில் படிக்க வைப்பது என்பதை நினைத்தும் பாராத ஒரு குடும்பத்தில் செவந்தி துணிந்து தன் மகளை அனுப்பி இருக்கிறாள். இந்த மூன்று ஆண்டுகளில் அவள் எத்தனை பழிகள், மனதோடு எத்தனை நெருப்புக் கண்டங்கள், கவலைகளுக்கு மனசைக் கொடுத்திருக்கிறாள்?

அடுப்படியில் இருந்தாலும் கொட்டிலில், கழனியில், களத்து மேட்டில் எங்கிருந்தாலும் சரோ அடிமனசில் ஒரு சக்தியாக வியாபித்திருக்கிறாள் என்றால் தவறில்லை.

சில நாட்களில் ஐந்து மணியுடன் வந்து விடுவாள். அவள் சைக்கிள் வந்து நிற்கும் ஓசை, அவள் வேக நடை, அம்மா என்று நடையிலேயே கொடுக்கும் குரல், ஆகியவற்றில் நெஞ்சுக்கனம் எப்படி உருகும்!

சரோ இப்படி ஒரு சக்தியாக உருவாவாள் என்று அவள் நினைத்திருக்கவே இல்லை. ஒரு காசு அவளறியாமல் செலவழிக்கவில்லை. இந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை ஏற்ற இறக்கங்கள்; முட்டல்கள், மோதல்கள்! ஆனால் முன் இருந்திராத நம்பிக்கையல்லவோ அவர்கள் மாற்றி மாற்றிப் பயிர் விளைவிக்கச் செய்கிறது?