பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

191

வெளியே ஆளனுப்பி காபி மிக்சர் எல்லாம் வாங்கிட்டு வந்து குடுத்திச்சி. சின்னம்மா பேருல எல்லாருக்கும் மதிப்பு இருக்கு. அங்கே சமையல் வேலை செய்யிது. கூட ரெண்டு எடுபிடி பொம்பிளங்களாம். எல்லாம் பொம்புளங்க. திருவான்மியூர்லேந்து ஏவாரணும். என் ரூமில தங்கிக்கட்டும் பாப்பா. இங்க ஆஸ்டல்ல எல்லாம் வேலை செஞ்சிட்டுத் தனியா இருக்கிற லேடீஸ்தா. ஸ்ட்டுடண்ட்ஸ் கூட போன வருசம் ரெண்டு பேர் இருந்தாங்க. பிறகு இப்ப வேலைக்குப் போறவங்களுக்கு மட்டும்ன்னு வச்சிருக்காங்க. ரொம்பப் பாதுகாப்பு. கிறித்தவங்கதான் நடத்திட்டிருந்தாங்க. ஆனா இங்க இதுக்கு தலைவியாக இப்ப இருக்ற அம்மா சொர்ண லலிதா பெரிய சோஷியல் வொர்க்கர். அவங்க மின்ன எம்பியா இருந்தவங்க. கேள்விப்பட்டிருப்பீங்க. ரொம்ப நல்ல மாதிரி. இவங்களுக்கு ரெண்டு பையன்க அமெரிக்காவுல டாக்டராக இருக்காங்க. இங்க இந்த ஹாஸ்டல் தவிர, நீலாங்கரையில் பெரிய முதியோர் இல்லம் நடத்தறாங்க. பார்வையில்லாதவங்ளுக்காக ஒரு சங்கம் கூட அவங்க தலைமையில் நடக்குது... எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை. எப்படியோ ஆடிக்காத்துல பறந்து வந்து இப்படி ஒரு பத்திரமான எடத்துல விழுந்திட்ட... ன்னு சொல்லிச்சு. நமக்கு அது குத்தாறப்பில இருந்தாலும் பெரிசா எடுத்துக்கறதுக்கில்ல.

"பத்து நாட்களுக்கு எங்கூடத் தங்க அம்மா பர்மிசன் குடுப்பாங்க. இல்லாட்டி இப்ப ஒரு ரூமில மூணு பேர் இருக்கிற இடத்துல ஒன்னு காலி இருக்கு. பத்து நாளைக்கு நூறு ரூபா கேட்பாங்க. குடுத்திடலாம். பிரச்சன இல்லன்னிச்சி. காலம ஏழரைக்குள்ள உனக்கு நாஷ்டா குடுத்திடறேன். பகலுக்கு அங்க காண்டின்ல எதானும் சாப்பிட்டுக்க. இங்க எட்டரைக்கு நாஷ்டா சாப்பிட்டு கையில் ஒரு சாம்பார் சாதம் எலுமிச்சை சாதம் தயிர் சாதம் லஞ்ச் கட்டிட்டு போறவங்க இருக்காங்க. அது ஏழரைக்குள்ள ஆவாது. ராத்திரிக்கு எட்டுக்குள்ள டின்னர் ரெடியாயிடும்னிச்சு. இதவிட பத்தரமா வசதியாக நம்ம குழந்தையைப் பாத்துக்கப்போறவங்க யாரு? அதுதா சொல்லச் சொல்லக் கேக்காம இந்த மாம்பழம் வாங்கிக் கொடுத்திச்சி.”