பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

கோடுகளும் கோலங்களும்

இவர்கள் சமையலறையில் தணிந்த குரலில் பேசுவது அப்பனுக்கு எப்படி எட்டியதோ?

“ஏம்பா ராசாத்திய பாத்தியா? ஒரு நட இங்க வரச் சொன்னியா?”

"பாத்த மாமா. அவங்க கூடத்தா இப்ப சரோவ வுட்டிருக்க...”

"எப்பிடி மக கூட இருக்காளா? மக நல்லபடியா வச்சிக்கிதா?”

“மக அவங்ககூட இல்ல. இவங்க ஒரு ஆஸ்ட்ல்ல இருக்காங்க. சமையல் வேலதா. ஆனா நல்லபடியா இருக்கேன். பிரச்னை எதும் இல்லைன்னு சொல்லிச்சி...”

செவந்தி மாம்பழத்தைக் கழுவி நறுக்குகிறாள்.

மெல்லியதோல்.உருண்டையான ருமானி. ஒரு துண்டை அப்பனுக்குக் கொடுக்கிறாள். அப்பன் அதை வாயில் போட்டுக் கொள்கிறான். கண்களில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணிர் பெருகிறது.

“ஏம்ப்பா... இப்ப இஸ்கூல் லீவுதான. ராசாத்தி மகளையும் பிள்ளைகளையும் மருமவனையும் ஒருவாட்டி கூட்டிட்டு வரச் சொல்லலாமில்ல. மக ருக்கு நல்லபடியாக இருக்கிறதா ருக்குமணி அவ ஆத்தா பேரை அதுக்கு வச்சிது. அதுக்கு ஒரு நெல்லது செய்யல பாவி நாங்க..” உணர்ச்சி வசப்பட்டு மார்பில் அறைந்து கொள்கிறார்.

“அப்பா.... என்ன இது? உங்ககிட்ட எதும் சொல்ல முடியல. அவங்கள நினைச்சா ஒடம்புக்கு ஆவறதில்ல இல்ல.”

“இல்ல செவந்தி. நெஞ்சு ஆறாத புண் இது. உங்கம்மா பழிகாரிதா என்ன அப்படி தடுத்துப் போட்டது. ஒரு பாவமும் அறியாத அவ மேல அபாண்டம் சுமத்தினா. அந்தப் பாவம் இங்க புண்ணா இருக்கு. அவ இங்க வந்து நா மனசில வச்சுக்கல என்று சொல்லுற வரைக்கும் ஆறாது...”