பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

227

பார்க்காதவர்கள், இடையில் வயது கூடி உருமாறியவர்கள், சிநேகிதர்கள், உறவுகள் விசாரணைகள்...

சின்னம்மா இவ்வளவு வைராக்கியமாக இருப்பாளா?

எல்லோரும் சரேலென்று எழுந்து நிற்கிறார்கள். ஒரு பேரலை வந்தாற்போல் கூட்டத்தில் ஆரவாரம்.

சாமியார் குருக்களையா பூசாரி சங்கரலிங்கம் எல்லோரும் கும்பங்களுடன் மூங்கில் படியில் ஏறுகிறார்கள்.

புனித நீர்க்கலசங்களை சாமியார் வாங்கிக் கும்பத்தில் சொறிகிறார். வெயில் பளபளக்கிறது. அந்தப் புனித நீரைச் சற்று இறங்கி நின்று கொண்டு கூட்டத்தின் மீது வீசித் தெளிக்கிறார்.

கைகளில் ஏந்துபவர்களும் தலை வணங்கி ஏற்பவர்களுமாகச் சூழலே புனிதமாகிறது.

ஆதவனும் தன் கதிர்களை மேகத்துள் முடக்கிக் கொள்கிறான்.

“உங்க மீது விழுந்திச்சா... எங்கமேல விழுந்திச்சி. இந்தாங்க கையில்.. இந்தாங்க" கணவன் குழந்தைகள் பெற்ற புனிதத்தை அண்ணி முகமலர்ந்து செவந்திக்கு நீட்டுகிறாள்.

பிறகு இசைப் பேருரை, பாட்டுக் கச்சேரி எல்லாம் தொடர்ந்து நடக்க இருக்கிறது. மாலையில் கலைப் பயணக்காரரின் அறிவொளி நிகழ்ச்சிகள் இருக்கின்றன. எல்லோரும் திரளாகக் குழுமி இருந்து பார்த்துக் கேட்டுப் பயனடைய வேண்டும் என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு கேட்கிறது. செவந்திக்கு எல்லாம் நிறைவாக இருந்தும் நெஞ்சம் தோய்ந்து விடுகிறது.

பிரசாதம் இரண்டு இடங்களில் வழங்குகிறார்கள்.

"மாமா மாமி இங்கே நீங்க இருங்க, நான் உங்களுக்கு பிரசாதம் வாங்கிட்டு வந்து தாரேன்” என்ற சரோ போகிறாள்.

"வாணாம்; நாம அங்க போயித்தான் வாங்கணும்... போகலாமில்ல..”