பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



24

கோடுகளும் கோலங்களும்

வயசு, அவன் போகும் போது ஆறுமாசமாக இருந்தான். அதற்கு அப்பன் முகமே தெரியாது.

“காப்பி வந்திடிச்சி. வாங்கடி...!” சுந்தரி வந்து பார்க்கிறாள்.

“யா... அழவா இருக்கு, இது ஒரு சைசா..” என்று நடுவில் ஓரடி விட்ட ஒடையில் நின்று கொண்டு, சாந்தி டயர் போட்டு குத்துகளை எண்ணுவதைப் பார்க்கிறாள்.

“செவந்தி அக்கா, இந்தவாட்டி நல்லா வெளஞ்சா, நானும் பயிர்வைக்கிறேன். ஏன் போக்கியத்துக்கு வுடனும்?”

“உன் அத்தான் சவால் வுட்டுருக்காரு. பார்ப்பம். காபித் தூளு இல்லியே வாங்கி வரச் சொன்னியா?”

“இல்லக்கா, டீத்தூளுதா இருந்திச்சி, போட்டேன். சரோசா ஸ்கூல் போயிட்டது அப்பமே. சரவணன் செத்த மின்னாடி அத்தான்கூட சைக்கிள்ல உக்காந்திட்டுப் போனான்.”

“மாமாவுக்குக் கஞ்சித் தண்ணில உப்புப் போட்டுக் குடுத்தே. வெந்நீர் வச்சித்துடச்சிட்டு, வேற துணி மாத்திட்டு உட்கார்ந்திருக்காரு...”

எல்லாரும் கரையேறி, தேநீர் குடிக்கிறார்கள். ஆயா தனக்குத் தேநீர் வேண்டாம் என்று சொல்கிறாள். “எனக்கு வெத்திலக் காசு மட்டும் குடுத்திடு!” “வேணி, இன்னிக்கி டிபன் போடலியா?” “கொஞ்சம் அரை லிட்டர்தான் போட்டே நேத்து. அம்மா தட்டி வச்சிடும். கிரைண்டர் எதுனாலும் வாங்கினா சல்லிசா இருக்கும். முடியலம்மா’ என்று உட்காருகிறாள் நீலவேணி. பூமியைத் தோற்றுவிட்டு, டிபன் கடை வைத்துப் பிழைப்பு நடக்கிறது.

“உங்கூட்டுக்காரர் என்னதா செய்யிறாரு?”

“அதெல்லாம் கேட்காதீங்க; ரகசியம்..” என்று அம்சு கிண்டுகிறாள்.