பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

கோடுகளும் கோலங்களும்


செல்லி அம்மன் கோயில் பூசாரி அதிகாலையில் வந்து கதவிடித்தார். “அந்தப் பொண்ணு, ராசாத்தி மக, கெணத்துல வுழப் போச்சுங்க. நல்ல வேள, நாம் பாத்திட்டே. சின்னானக் காவல் வச்சிட்டு சேதி சொல்ல ஒடியாந்தே. பொண்ணு பாவம் பொல்லாதுங்க. ஒண்ணு நீங்க வச்சிக்கணும். இல்லாட்டி பத்திரமா அவாத்தா கிட்டக் கூட்டிப் போய் ஒப்படச்சிடுங்க...” என்றார்.

அப்பா கெஞ்சியும் அவள் வரவில்லை. அத்தை வீட்டில் கொண்டு வந்து வலுக்கட்டாயமாகக் கஞ்சி குடிக்கச் செய்தார்கள். சின்னம்மாளுக்குச் சேதி சொல்ல ஆள் போயிற்று. சின்னம்மா வந்தாள்.

அம்சுவின் மாமன்... அவன் என்ன உறவு?

சின்னம்மாவுக்கு எந்த உறவிலோ அத்தை மாப்பிள்ளையாம். நடுத்தெருவில் நிற்க வைத்து அவளை அநியாயம் பண்ணினான்.

“எங்க மானம் மரியாதையச் சந்தி சிரிக்க வச்சிட்டியே? பாவி, எங்களுக்குத் தல தூக்கமுடியாம, அறுத்தவ, ஊரு மேல போயி மகளையும் உன் வழிக்கு விட இங்க கொண்டாந்து விட்டிருக்க?”

அப்போது செவந்தி திண்ணையில் நிற்கிறாள். துடப்பத்தை எடுத்து வந்து அவளை அடித்தான் மாபாவி!

அவன் ஊர்-உறவுக்குப் பெரிய மனிதர். பெண்டாட்டி தவிர மேல வீதியில் தொடுப்பும் உண்டு. இவன் நியாயம் பேசினான்!

அப்பா... உள்ளே வைக்கோல் போர் போட்டுக் கொண்டிருந்தார்.

ஓடினாள். “அப்பா, சின்னம்மாவை செங்கண்ணு மாமன் நடுத்தெருவில நிறுத்தித் துடப்பத்தால அடிக்கிறாரு அம்மா, இன்னும் அல்லாரும் பாத்திட்டிருக்காங்க!”

அப்பா ஓட்டமாக ஓடிவந்தபோது, சின்னம்மா கண்ணீரும் கம்பலையுமாகத் தலைவிரி கோலமாக நின்றிருந்தாள்.