பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

71

சரோ ஊக்கமாகப் படிப்பது பெருமைதான். ஆனால் இவளால் புரிந்து கொள்ளமுடியாத முரண்பாடு இருப்பதால் உள்ளூர ஓர் அச்சம் பற்றிக் கொள்கிறது.

இவள் படிப்பு, சாதி, குலம் இல்லாத ஒருவனுடன் இவள் போகும்படி சந்தர்ப்பம் நேர்ந்து விட்டால்? அன்று சின்னம்மாவுக்கு நேர்ந்த நியாயம் இங்கு நேராது என்பது என்ன நிச்சயம்? செங்கண்ணு மாமன் போய் விட்டான். ஆனால் இந்தக் கீழ்-மேல் தெருக்களில் பிறர் விவகாரங்களில் தலையிட்டு, கண் மூக்கு வைத்துப் பெரிதாக்கி ரணங்களைக் குத்திக் கிளறப் பல செங்கண்ணு மாமன்கள் இருக்கிறார்கள். இவர்கள் பேச்சுக்குத் தாளம் போடும் பிறர் நோவறியாத பெண்களும் இருக்கிறார்கள்.

சுந்தரிக்குப் புருசன் செத்த போது, அவளுக்கு வளையலடுக்கிப் பூ வைத்துச் சிங்காரித்து, இலை போட்டுப் பரிமாறி, எரிய எரிய எல்லாவற்றையும் உடைத்துப் பொட்டழித்துக் குலைத்து, அவமானம் செய்தார்கள். இதெல்லாம் சாதி, சமூகக் கட்டுப்பாடுகள்.

இதை இந்த அநியாயக்கார ஆண்களும் அவர்களுக்குத் துணை நிற்கும் பெண்களும் இன்றும் நாளையும் அமுல்படுத்துவார்கள். இந்தக் கோடுகள், வரமுறைகளை யார் எப்படி அழிக்கப் போகிறார்கள்?

சுந்தரி சாதாரணமாக இருக்க வேண்டும் என்று தூண்டிப் பக்க பலமாக இருப்பவளே செவந்திதான். அதனால்தான்

அவளுக்கு இவள் மீது தனியான பிரியம்.

அவளுடைய அம்மா முணுமுணுப்பதையோ எச்சரிப்பதையோ செவந்தி செவிகளில் வாங்கிக் கொண்டதில்லை.

புருசன் போனபின் ஒருத்தி, அடுப்படி ஊழியத்துக்கே உரியவள். கட்டுக்கிழத்தி, பூவும் நகையுமாக மேனி மினுக்கிக் கொண்டு நெளிவெடுக்க வேண்டும் என்ற கருத்துக்களே அவளுக்குப் பிடிப்பதில்லை. ஒரு சிறு மாறுதலையேனும் கொண்டுவர வேண்டும் என்று நினைப்புக்கே ஊக்கமில்லாத சூழலில் சரோ.. என்ன செய்யப் போகிறாள்? கண்களை மூடிக் கொண்டு பழக்கமில்லாத பாதையில் அடி வைக்கிறாளா?