பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

79

இருக்கு. முழுகிட்டு நல்லதா வேட்டி எடுத்து உடுத்திட்டு இருங்க!”

இவள் செல்லும் போது அவர்கள் வரப்பில் நின்று இவள் கழனியைப் பார்க்கிறார்கள்.

“செவந்திம்மா? உங்களுக்கு நூத்துக்குத் தொண்ணுத் தெட்டு மார்க்" என்று சொல்கிறார் பெரிய மேடம். "பத்தி நடவு எவ்வளவு வசதியாக இருக்கு பாத்தீங்களா? வடத்துக்கு எவ்வளவு குத்து வச்சீங்க?”

“பத்தொம்பதுதா.ரெண்டு மூணுல இருபது இருக்கும்...”

“பரவாயில்ல.. இல்லாட்டி கொச கொசன்னு அதுங்களுக்குக் காத்துப் போக வசதி இருக்காது... இது சம்பாப் பயிர் இல்ல?”

ஒரு சட்டியில் சுண்ணாம்படித்து கரும்புள்ளி வைத்துக் கவிழ்த்திருக்கிறாள்.

பக்கத்து மேல் வீதிப் பொன்னம்பலத்தாரின் வயல். அதில் கொச கொசவென்று அடர்ந்து இருக்கிறது. சிலவற்றில் பழுப்பாக இருக்கிறது. சொட்டை விழுந்த முடி போல் தெரிகிறது. சீராக இல்லை. களையும் இருக்கிறது. இன்னும் பூப்பிடிக்கவில்லை.

“அந்த நிலத்துல பூச்சி விழுந்திச்சின்னா நமக்கும் வந்திடுமோன்னு பயமா இருக்குங்க...”

"பயப்படாதீங்க. ஒரு தாம்பாளத்தில் தண்ணி ஊத்தி கிரசினும் ஊத்தி நடுவில ஒரு காடா விளக்கக் கொளுத்தி வச்சிடுங்க. நாலு பக்கமும் பூச்சி வந்தா செத்திடும்... அடுத்த முறை உங்களைப் பார்த்து எல்லாரும் இதே மாதிரி போடுறோம்பாங்க. நீங்க கத்துகிட்டத, பத்துப் பேருக்கு சொல்லிக் குடுக்கணும். அதுக்கு ஒரு புரோகிராம் இருக்கு...”

“காபி கொண்டாந்தாளே நீலவேணி, எங்க ஓப்படியா சுந்தரி, எல்லாரும் கொஞ்ச கொஞ்ச நிலம் வச்சிருக்காங்க. அத்தயும் வாரத்துக்கு உட்டிருக்காங்க. பொம்புள எப்படி விவசாயம் செய்றதுன்னு பயப்படுறாங்கம்மா. எனக்கு