பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கோடுகளும் கோலங்களும்

"இப்படித்தானே பயமாயிருந்திச்சி. இப்பதா தயிரியம் வந்திருக்கு.”

"இனி வந்திடும்...”

எல்லோரும் ஜீப்பில் ஏறிக் கொள்கிறார்கள். செவந்தியையும் உள்ளே அடைத்துக் கொள்கிறார்கள்.

வீட்டு வாசலில் வண்டி நிற்கிறது. அப்போது சைக்கிளில் சரோ வந்து இறங்குகிறாள்.

"அம்மா எல்லாம் உள்ள வாங்க! வாங்க சார்...!"

“இல்லம்மா, நேரமில்ல. இன்னும் நிறைய இடத்துக்குப் போகணும்...எறங்கிக் காபி குடிச்சமே..?”

"ஒ.... அதெல்லாம் கூடாது. அம்மாசாமி கும்புட்டிருக்கு. எதாகிலும் எறங்கி வந்து சாப்புடணும்...”

"அதெல்லாம் வாணாம்மா..."

“இப்படி எறங்கி வந்து உக்காருங்க... நான் கொண்டாறேன்..” என்று பாயாசப் போணியை அப்பா எடுத்து வருகிறார். வலுக்கட்டாயமாகத் தம்ளரில் ஊற்றிக் கொடுக்கிறார். சரோசா இலையில் சுடச்சுட வடைகளைக் கொண்டு வருகிறாள். கன்னியப்பன் அப்போது ஓடி வருகிறான்.

“வணக்கம் ஸார்! வணக்கம்மா! சொன்னாங்க, ஆபிசர்லாம் வந்திருக்காங்கன்னு, வந்தேன்...”

“கன்னியப்பன்தான் எல்லா உதவியும். நல்ல உழைப்பாளி...”

‘உனக்கு சொந்த நிலம் இருக்காப்பா?”

“இனி வாங்க வேணும். பாத்திட்டிருக்கேணுங்க...”

"கலியாணம் ஆயிருக்கா?”

"இல்லங்க...."

“காணி இருக்கிற பெண்ணப் பாத்துக் கட்டிக்க.. சரியாப் போயிடும்” என்று சொல்கிறார் ஆபீசர் அம்மா.