பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஏன் வரவில்லை - கவிதையில் சிவப்பு விளக்குச் சந்தையில் சந்திக்கும் பெண், பசியைப் பசியால் விரட்டி அடிக்கிறோம் என்கிறாள். விளக்கம் கேட்டபோது, "எங்களுக்கோ குடற்பசி எங்களைத் தேடிவரும் உங்களுக்கோ நல்ல உடற்பசி' என்று இனம் பிரித்து இருநிலைகளைப் பேசுகிறாள். ‘வெட்கத்திரை கவிதையில் வயதுக்கு வருவதற்கு முன், பின் என இருநிலை. யோசித்துப் பார்த்தால் எல்லா இடங்களிலும் மீராவின் இருநிலைப் பார்வை பளிச்சிடுகிறது. மீராவின் தனித்துவங்களில் ஒன்று - மிகச் சாதாரணமான செய்திகளுக்குக் கூட அசாதாரண அழகுகள் சேர்ப்பது. ஆழ்ந்து நிற்கும் கவியுளம் கொண்டவர்க்கேயன்றி மற்ற வர்களுக்கு இது சாத்தியமல்ல. வெறும் வார்த்தைக் குவியல்களுக்குள் முகம் புதைத்துக் கொள்ளும் பச்சோந்திக் கவிஞர்களுக்கு இது ஒரு நாளும் கைவருவதில்லை. 'மறுபடியும் மறுபடியும் என்றொரு கவிதை. காதலியின் பார்வையும், அதன் தொடர்ச்சியாக வருத்தம் தரும் நினைவுகளும் தான் கவிதைப் பொருள். பார்வை சுகமானது, நினைவுகளோ பயங்கரமானது. அதனால் பார்வைகள் ஊர்ந்து வரும் பட்டுப் பூச்சிகளாம்! நினைவுகள் அரிப்பூட்டும் கம்பளிப் பூச்சிகளாம்! எத்தனை எளிமை! எத்தனை அருமை. மயிலிறகால் வருடுவது போல் மென்மையிலும் மென்மையாகப் பேசும் சுக லயம் மீராவின் தனிச் சிறப்பு. நன்றாக எழுதுமென்று பைலட் பேனா வாங்கினாராம். அது 'ஏமாற்றம் தந்து விட்டதாம். கவிஞர் அதை எப்படிச் சொல்கிறார் என்று பாருங்கள்: