பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

123

லைத் தரும் விழிகள், நஞ்சுதரும்! ஆம்! அமிர்தம் உண்டு ஆனந்தப்பட்டவர்களுமுண்டு. நஞ்சு கண்டு நலிந்தவர்களுமுண்டு! ஒரே பொருள், இருவகையான, செயலுக்குப் பயன்படுகிறது! ஆனால் ராதாவின் கண்கள், அமிர்தத்தையும் ஊட்டவில்லை, நஞ்சையும் தரவில்லை! இயற்கையாக எழும் எண்ணத்தை அடக்கி மடக்கி, மாற்றிக்காட்ட அவளது கண்கள் கற்றுக் கொண்டன!

உண்மையான அன்பு கனிந்திருந்தால் அக் காரிகை, தன்னைக் காதலன் நோக்கும்போது, தலைகுனிந்து நிற்பாள்; பளிங்குப் பேழையின் மூடியை மெதுவாகத் திறப்பாள். கண் சரேலெனப் பாயும் காதலன்மீது! நொடியில் மூடிக் கொள்ளும்! இடையே ஒரு புன்சிரிப்பு – மின்னலெனத் தோன்றி மறையும்!

காதலற்று, வேறு எதனாலேனும், பொருள் காரணமாகவோ, வேறு போக்கு இல்லை என்ற காரணத்தாலோ, கட்டுப்பட்ட காரிகை, தன்னுடன் பிணைக்கப்பட்டுள்ளவன் தன்னைக் காணும்போது, உள்ளத்தில் களிப்பு இருப்பினும் இல்லாது போயினும், பற்களை வெளியே காட்டியும், அவன் அப்புறம் சென்றதும், முகத்தில் மெருகு அற்று சோர்வதும் உண்டு, தானாக மலர்ந்த மலருக்கும், அரும்பை எடுத்து அகல விரித்ததற்கும் உள்ள வித்தியாசம் இங்கும் உண்டு.

ராதா, மலராத மலர்! அரும்பு! முள்வேலியில் கிடந்தது. கருப்பையா, அதனை அகல விரித்தான்! அவன் ஆனந்தமடைந்தான். ராதா ஆனந்தமடைந்ததாக நடித்தாள்! அந்நடிப்பே அவனுக்கு நல்லதொரு விருந்தாயிற்று! நடிப்பும் ஒரு கலைதானே!

கருப்பையாவுக்கும் ராதாவுக்கும் கள்ள நட்பு பெருகி வருவதைக் கணவனறியான். நல்ல தோட்டம், அழகான மாடு கன்று இருப்பது கண்டும், பெட்டியைத் திறந்ததும் பணம் நிரம்பி இருப்பதைப் பார்த்ததும் பெருமை அடைவதைப் போலவே தன் அழகிய மனைவி ராதாவைக் கண்டு பெருமை அடைந்தான்.