பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

கபோதிபுரக்

செக்கு இழுத்து இழுத்து மாடுகெட, எண்ணெயைத் தடவித் தடவிப் பிறர் மினுக்குவதைப் போல ராதாவும் கருப்பையாவும் பாடுபட்டு, திருடி, சூது, சூழ்ச்சி செய்து பணம் சேர்த்துச் சேர்த்து அனுப்பி அதனை வைத்துக் கொண்டு ஆனந்தமாக விஸ்கியும் பிராந்தியும் வாங்கிக் குடித்துச் சிரித்தான் சிங்காரவேலன்.

“இப்படியும் எனக்குத் தொல்லைவருமா? நீ செய்த வேலைதானே! பாவி! உன்னால்தானே நான் இப்பாடுபடுகிறேன். திருடுகிறேன்! அவர் என்றைக்கேனும் கண்டுவிட்டால், எங்கே பச்சைக்கல் பதக்கம் என்று கேட்க ஆரம்பித்தால் நான் என்ன செய்வேன்” என்று சிந்தை நொந்து கருப்பையாவைக் கேட்பாள். அவன் பலமுறை சாதகமாகவே பதில் கூறினான். சஞ்சலமும் சலிப்பும் அவனுக்கும் ஆத்திரத்தை மூட்டி விடுமல்லவா? “சரி! என்னைப்பற்றிக் கவலைப்படவேண்டாம். அவன் படத்தைக் காட்டிவிடட்டும். நான் ஒன்றும் சந்நியாசி அல்ல! உனக்குத்தான் ஆபத்து. ஓடவேண்டியதுதான் நீ வீட்டை விட்டு” என்று மிரட்டினான்.

“படுபாவி! என்னைக் கெடுத்ததுமின்றி, மிரட்டியுமா பார்க்கிறாய். நீ நாசமாய்ப் போக; உன் குடிமுழுக” என்று ராதா தூற்றினாள்.

ஆனால், மாதம் முடிகிறது என்றதும், இருவரும் தகராறுகளை விட்டுவிட்டு, பணத்தைச் சேர்த்து அனுப்புவதிலே அக்கரையாக இருப்பார்கள். ஏன்! வயிற்றிலுள்ள குழந்தை வாழ்க்கையில் இழிச்சொல்லோடு இருக்கக்கூடாதே! அதற்குத்தான்!

“பாவி, படத்தைக்காட்டி, என் முரட்டுக் கணவன். என்னைத் துரத்திவிட்டால் என் குழந்தையின் கதி என்னவாகும். கண்டவர் ஏசுவார்களே! அதோ, அந்தப் பிள்ளை வீட்டைவிட்டு ஓடிவிட்டாளே ராதா, அவள் பிள்ளை,” என்றுதானே தூற்றுவார்கள்.