பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

151

போனாள் ராதா. பரந்தாமனுக்கு ஜுரம் குறைந்ததுபோல் காணப்பட்டது. ஆனால் அம்மை வார்த்துவிட்டது. சிவந்த அவன் மேனியில் சிவப்புச் சித்திரங்கள் பல நூறு ஆயிரம் திடீர் திடீரெனத் தோன்றின. மயக்கமும், மருட்சியும் அதிகரித்தன. குளறலும் குடைச்சலும் ஆரம்பமாயிற்று. புரண்டு புரண்டு படுத்ததால் அம்மை குழைந்துவிட்டது. பார்க்கவே பயங்கரமாக இருந்தது பரந்தாமனை.

வேதவல்லி வேப்பிலையும் கையுமாக அவன் பக்கத்தில் வீற்றிருந்தாள்.

அம்மையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, பரந்தாமனின் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. வேதவல்லி வேப்பிலை கொண்டு வீசி, உபசாரம் செய்தாள். மாரியோ கேட்கவில்லை; பரந்தாமனின் மேனியில் துளி இடங்கூடப் பாக்கி இல்லை. எங்கும் சிகப்புப் பொட்டுகள், பூரித்துக் கொண்டிருந்தன. பரந்தாமனின் உடல் எரிச்சல் சொல்லுந்தரமன்று. அவன் அம்மைத் தழும்புகளைத் தேய்த்து விடுவான், தழும்புகள் குழைந்துவிடும். வேதவல்லி “ஐயோ அபசாரம், அபசாரம் மாரி! கோபிக்காதே — மகன் மீது சீறாதே. மாவிளக்கு ஏற்றுகிறேன்” என்று வேண்டுவாள். மாரிக்கு என்ன கவலை.

இரவு பத்து மணிக்கு, ஒரு உருண்டை அபினெடுத்தாள் ராதா. பாலில் கலக்கினாள். நேரே படுக்கையறை சென்றாள். பாதி மயக்கத்தில் படுத்திருந்த அவள் கணவன் “ராதா? எனக்கேண்டி கண்ணே இவ்வளவு பால்! நீ கொஞ்சம் சாப்பிட்டால்தான்” என்று கூறினான்; கெஞ்சினான். “வேணாமுங்கோ, சொல்றதைக் கேளுங்க. நான் இப்போதான், பெரிய டம்ளர் நிறைய பால் சாப்பிட்டேன்” என்று சாக்குக் கூறினாள் ராதா.

அந்த நேரத்திலே அவனுக்கு ஏதோ குஷி! விளையாட வேண்டுமென்று தோன்றிவிட்டது.

“நீ குடித்தால்தான் நான் குடிப்பேன்” என்று கூறிவிட்டான்.