156
கபோதிபுரக்
“தம்பி பரந்தாமா, இதோ இப்படிப் பார். ராதா வந்திருக்கிறாள்” என்று வேதவல்லி கூறினதும், பரந்தாமன், “யார் ராதாவா, இங்கேயா” என்று கேட்டுக் கொண்டே கண்களைத் திறந்தான், ராதாவைக் கண்டான். படுக்கையிலிருந்து தாவி, தன் கரங்களால் ராதாவை இழுத்தான். ராதா தழுதழுத்த குரலுடன் கண்களில் நீர் ததும்ப, “வேண்டாம், வேண்டாம்! என்னைத் தொடாதீர்கள்” என்றாள்.
பரந்தாமனின் விசனம் அதிகமாகிவிட்டது. கரங்களை இழுத்துக் கொண்டான். “மறந்துவிட்டேன் ராதா! அம்மை தொத்துநோய் என்பதை மறந்துவிட்டேன். என் பிரமையின் பித்தத்தில், எனக்கு எதுதான் கவனத்துக்கு வருகிறது” என்று சலிப்புடன் கூறினான். ராதா பதைபதைத்து, “பரந்தாமா, தப்பாக எண்ணாதே. நான் உன்னைத் தொட்டால் அம்மை நோய் வந்துவிடுமென்பதற்காகக் கூறவில்லை. நீ தொடும் அளவு பாக்கியம் எனக்கில்லை. நான் ஒரு பாவி” என்றாள். புன்னகையுடன் பரந்தாமன் “நீயா பாவி? தப்பு, தப்பு. ராதா நான் பாவி, நான் கோழை, என்னால்தான் நீ துயரில் மூழ்கினாய்” என்று கூறிக்கொண்டே சிங்காரவேலனிடமிருந்து வாங்கிக்கொண்டு வந்த “போட்டோவை” ராதாவிடம் கொடுத்தான், ராதா சிறிதளவு திடுக்கிட்டுப் போனாள். பரந்தாமனைப் பார்த்து “இந்தப் படத்தைக் கண்டபிறகுமா, என்மீது உனக்கு இவ்வளவு அன்பு. நான் சோரம் போனதைக் காட்டும் சித்திரங்கூட உன் காதலை மாற்றவில்லையா” என்று கேட்டாள்.
“ராதா, கல்லில் பெயர் பொறித்துவிட்டால், காற்று அதனை எடுத்து வீசி எறிந்துவிடுமா!” என்றான் பரந்தாமன். அவனுடைய இருதய பூர்வமான அன்பு கண்ட ராதாவால் அழுகையை அடக்க முடியவில்லை. இவ்வளவு அன்பு கனியும் பரத்தாமனிடம் வாழாது வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டு வழுக்கி விழுந்ததை எண்ணினாள். ஆனால் அவள் என் செய்வாள்?