பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

கபோதிபுரக்

உமை நீதானே!” என்று பரந்தாமன் பேசிக் கொண்டே இருந்தான்.

கேட்கக் கேட்க ராதாவின் உள்ளம் தேன் உண்டது. ஆனாலும், கடுமையான அம்மையின்போது, பேசி, உடம்புக்கு ஆயாசம் வருவித்துக் கொள்ளக்கூடாதே என்று அஞ்சி, பரந்தாமா போதும்; பிறகு பேசுவோம். உன் உடம்பு இருக்கும் நிலைமை தெரியாது பேசிக் கொண்டிருக்கிறாயே” என்று கூறி ராதா அவன் வாயை மூடினாள்.

“உடம்பு ஒன்றும் போய்விடாது. போனாலும் என்ன! உன்னைக் கண்டாகிவிட்டது. உனக்கு இருந்துவந்த ஆபத்தைப் போக்கியுமாகிவிட்டது. இனி நான் நிம்மதியாக...” என்று கூறி முடிப்பதற்குள் ராதா மீண்டும் அவன் வாயை மூடி, “அப்படிப்பட்ட பேச்சு பேசக்கூடாது. நான் சாகலாம், ஆனால் உங்களுக்கு ஒரு கெடுதியும் சம்பவிக்கலாகாது” என்று கூறினாள். ராதாவைக் கண்ட ஆனந்தம் அவளிடம் பேசியதால் ஏற்பட்ட களிப்பு பரந்தாமனின் மனதில் புகுந்தது. அயர்வு குறைந்தது. பேசிக் கொண்டே கண்களை மூடினான். அப்படியே தூங்கிவிட்டான். அவன் நன்றாகத் தூங்கும்வரை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாள் ராதா. மெல்ல குறட்டை விட்டான் பரந்தாமன். ராதா மெதுவாக எழுந்தாள். தாயை அழைத்தாள். இருவரும் சமயலறை சென்றனர். அடுப்பில் நெருப்பை மூட்டினர். பரந்தாமன் தந்த போட்டோவை எரியும் நெருப்பில் போட்டுக் கொளுத்திவிட்டனர். பின்னர் ராதா மெல்ல நடந்து வீடு சென்றாள். படுத்துறங்கும் கணவன் பக்கத்தில் படுத்தாள் பூனைபோல, சில நிமிடங்கள் வரை ராதாவின் கவனம் முழுவதும் பரந்தாமன் மீதே இருந்தது. திடீரென அவள் திடுக்கிட்டாள். ஏன்? தன் கணவன் குறட்டைவிடும் சத்தமே கேட்கவில்லை. என்றுமில்லாத அதிசயமாக இருக்கிறதே என்று எண்ணி மெதுவாகக் கணவன்மீது ஒரு கையை வைத்தாள்!. பனிக்கட்டி போல ஜில்லென இருந்தது. அலறிக் கொண்டே, அவர் உடலைப் பிடித்து அசைத்தாள். பிணம் அசைந்தது. அபின் அதிகம்; மரணம்.