பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கோமளத்தின்

“எதைக் கண்டு நீ ஆசைப்பட்டாய் தம்பி!”

“எதைக் கண்டா? என்ன அப்பனே, அப்படிக் கேட்கிறாய்? உனக்குக் கண்ணில்லையா! அவளுடைய பார்வை எப்படிப்பட்டது? வாட்டுகிறதே என்னை. அவள் மேனி என் மனதை உருக்குகிறதே. அவள் நடையழகை என்னென்பேன். உடை அழகை என்னென்பேன்? உடற்கட்டு உள்ளத்திலே கொள்ளை எண்ணத்தைக் கிளப்புகிறதே. அவள் பேச்சு எனக்குத் தேனாக இருக்கிறதே. நீ பேசிப்பார், அவளோடு. தெரியும் உனக்கு அந்த இன்பம். வேண்டாம் நண்பா, பேசக்கூடாது. என் கண் எதிரே வேறு ஆளுடன் அவள் பேச நான் சகியேன். கண்களைச் சற்று குறுக்கிக் கொண்டு கருத்துத் திரண்டு வளைந்துள்ள புருவத்தை சிறிதளவு அசைத்தபடி அவள் பேசும்போது நீ கண்டால் தெரியும், அந்தக் காட்சியின் அழகை! என்னை அந்தச் சிங்காரி சொக்க வைத்து விட்டாள்.”

“ஆம்! அதிலே அவள் மகா கைகாரி!”

“நண்பா, அப்படிச் சொல்லாதே! அவளை அடைய நான் பட்டபாடு உனக்கென்ன தெரியும். இவ்வளவு பழக்கம் ஏற்பட நான் எத்தனை நாட்கள், வாரங்கள் காத்துக்கொண்டிருந்தேன் தெரியுமோ. மான் குட்டி போலவன்றோ அவள் துள்ளி ஓடினாள்! நான் முதன் முதல் அவள் கைகளைப் பிடித்து இழுத்தபோது அதை எண்ணும்போதே என் உள்ளம் எப்படி. இருக்கிறது தெரியுமா?”

“வேதாந்தம் பேசாதே நண்பா!”

“வேதாந்தம் அல்ல தம்பி, அனுபவம்! நான் பட்டபாடு. உனக்கு வர இருக்கும் ஆபத்து கேள் தோழா! அவளை நம்பாதே. அவள் சிரிப்பிலே சொக்கி வீழ்ந்து சிதையாதே, அவளைத் தீண்டாதே. அவள் ஒரு விபச்சாரி. விபச்சாரியின் தன்மையோடு கொலைகாரியின் மனம் படைத்தவள் அவள்”

பாஸ்கரன், 'பளீர்' என ஒரு அறை கொடுத்தான் லிங்கத்தின் தாடையில்.