பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோபம்

37

இருக்கிறது. அதைவிட அதிகமாக ‘சாகசம்’ இருக்கிறது. பாழாய்ப் போன பருவம் மாறிவிடுகிறதே என்ற கவலைதான்! அவளுக்கு பவுடரும், மினுக்குத் தைலமும் எத்தனை நாளைக்குத்தான் பருவத்தை மறைத்து பாவையாக்கிக் காட்டமுடியும்? இளமை மட்டும் என்றுமே இருக்குமானால் இகத்திலே இவளுக்கு இணை யாருமில்லை என்று ஆகிவிடுவாள் கோமளம். அவ்வளவு கைகாரி! ஆனால் லிங்கம் தன்னை அலட்சியம் செய்வதைக் கண்டாள். மேல்விழுந்து செல்ல மட்டும் பயமாகத்தான் இருந்தது. மேலும், பாஸ்கரன் இருந்தான். பணத்துடன், பித்தம் தலைக்கேறி.

‘சம்போ! சதாசிவம்!’ — என்று உருக்கமாகக் கூறிக்கொண்டே, ஜடைமுடியுடன் நெற்றியில் நீறு துலங்க, நீண்டதொரு காவியாடை அணிந்து, ஒரு சாமி, கோமளத்தின் வீடு சென்றார். பிச்சை போட வேலைக்காரி வந்தாள். அரிசியைக் கொட்டினாள் பையிலே. “அபலையே! இந்தா அருட்பிரசாதம்” என்று கூறியபடி, தன் வெறுங்கையை நீட்டினார் சாமி. வேலைக்காரி விழித்தாள். “ஏன் விழிக்கிறாய் திற வாயை” என்றார் சாமி. திறந்தாள், கையை வாயருகே கொண்டு போனார். எங்கிருந்தோ சீனி வந்தது. சுவைத்தாள் வேலைக்காரி. சாமியின் அற்புதத்தை ஓடோடிச் சென்று கோமளத்துக்கு கூறினாள். கோமளம் சாமியை நாட, சாமி பலவித அற்புதங்களைச் செய்து காட்டினார்.

“சாமி! தங்களுக்கு வேறு என்னென்ன தெரியும்” என்றாள் கோமளம். “ஆண்டவனின் அடிமைக்கு அனந்தம் அற்புதம் செய்யத் தெரியும். கைலையங்கிரியான் கடாட்சத்தால் காணாத பொருளைக் கண்டெடுப்பேன்— இல்லாத பொருளை உண்டாக்குவேன்—ஆகாத காரியத்தை ஆக வைப்பேன்— பேயோட்டுவேன்— பித்தம் தெளிவிப்பேன்— இரசவாதம் செய்யவும் வல்லேன். ஆனால் அதை மட்டும் அடிக்கடி செய்வதில்லை”—என்று சாமியார் கூறினார்.