பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கோமளத்தின்

கோமளத்தின் கெட்டகாலம் மாறி மறுபடியும் அவள் சீமாட்டியாக வாழ்வதைக் கண்ணால் காண்பதைவிட, தான் பழையபடி பஞ்சையாகிப் போவதேமேல் என்று எண்ணினான். ஆனால் வீரப்பன், கணக்குப்படி, எவ்வளவோ செலவிட்டும், லிங்கத்தின் பணம் குறையவில்லை. வீரப்பன் லிங்கத்தின் சொத்தைக் கொண்டு ஆரம்பித்த வியாபாரம் நல்ல லாபத்தைத் தந்தது. எனவே பணத்துக்குப் பஞ்சமில்லை! ஆனால் பாதகி கோமளம் மறுபடியும் சீமாட்டியாவதா. அதுதானே கூடாது என்று எண்ணி எண்ணி வாடினான் லிங்கம். அந்த பாஸ்கரன் மட்டும் அவளை கைவிட்டால் போதும், அவள் கொட்டம் அடியோடு அடங்கும். அவனோ அவளைக் கலியாணம் செய்து கொள்கிறானாமே. இதற்கென்ன செய்வது என்று ஏங்கினான்.

ஒரு நாள் இரவு தோட்டக்கார ஒற்றன் ஓடோடி வந்து ஏதோ சேதி சொல்லிவிட்டுப் போனான். உடனே மோட்டாரை ஒட்டிக் கொண்டு லிங்கம் நகரின் கோடியில் இருந்து ஒரு சிறு தெருவுக்குச் சென்றான். ஒரு வீட்டினுள்ளே போனான்.

ஒரு நடுத்தர வயதுடைய மாது “வாங்கய்யா, உட்காருங்கோ! எங்கிருந்து வருகிறீர். அம்மா, அம்புஜம் ஏதோ வெட்கப்படாதே—தாம்பூலம் எடுத்துவா” என்றாள். அது ஒரு தாசி வீடு. அம்புஜம் என்ற பெண் தாம்பூலத்தை எடுத்து வந்து வைத்துவிட்டு வெட்கப்பட்டாள். அது அவளுடைய வாழ்க்கை வித்தையிலே ஒரு முக்கியமான பாகம்.

“அம்மா! நான் வந்த விஷயம் வேறு. நீங்கள் எண்ணுவது வேறு. அம்புஜம், நாட்டியம் ஆடுமென்று கேள்விப்பட்டேன். பிரபலமான கலாமண்டபத்திலே பயிற்சியாமே! எனக்கு நாட்டியக் கலையிலே கொஞ்சம் ஆசை” என்றான் லிங்கம். நாட்டியம் ஆடும்; ஆனால் குழந்தைக்கு இப்போது கொஞ்சம் உடம்பு சரியில்லை என்றாள் தாய்.