பக்கம்:கோயில் மணி.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

கோயில் மணி

கம்பர்: அடியேன்தான், கம்பன்.

திருவள்ளுவர்: அப்படியா? வரவேண்டும், வரவேண்டும். ஏது, மிகவும் அருமையாக இருக்கிறதே! (தறியை விட்டு வந்து வரவேற்கிறார்.)

கம்பர்: (கீழே விழுந்து வணங்கியபடியே) தங்களேப் பார்த்து ஆசிபெற்றுப் போகலாம் என்று வந்தேன். (எழுந்து நின்று) ஏ, வல்லி, நீயும் வந்து வணங்கு, (இடைகழியை நோக்கிச் சொல்கிறார்.)

திருவள்ளுவர்: அங்கே யார்? உன் மனைவியா?

கம்பர்: இல்லை, இல்லை. என் மனைவிதான் ஒரு பிள்ளையை வைத்துவிட்டு இறந்துபோய் விட்டாளே! இவள்தான் என் கவிதை வளர ஊக்கம் அளிக்கிறவள்.

திருவள்ளுவர்: ஆம், ஆம்: கேள்வியுற்றிருக்கிறேன். இந்தப் பெண்ணினுடைய வீட்டைத்தானே சடையப்ப வள்ளல் கதிரால் வேய்ந்தார்?

கம்பர்: ஆமாம்; தாங்கள் எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறீர்களே!

வல்லி: குறள் இயற்றிய பெருமானுக்குத் தெரியாதது ஏதேனும் உண்டோ?

திருவள்ளுவர்: (சிரித்துக்கொண்ட) அமருங்கள், அமருங்கள். (உட்காருகிறார்.)

கம்பர்: (அமர்கிறார்) உங்கள் இல்லுறை தெய்வத்தைத் தரிசித்து வணங்கவேண்டுமென்று இவளுக்குப் பெரிய ஆர்வம். நான் இங்கே புறப்படுவது தெரிந்து தானும் வருவதாகப் புறப்பட்டுவிட்டாள்.

[வல்லி நின்று கொண்டே இருக்கிறாள்.]
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/100&oldid=1384068" இலிருந்து மீள்விக்கப்பட்டது