பக்கம்:கோயில் மணி.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலக் குழப்பம்

97

வல்லி: ஒருகால்....

திருவள்ளுவர்: ஆம்; அதை நம் உள்ளம் அறிந்தால் போதும். அவளைப் பார்க்காவிட்டால் என்ன?

[வாசலில் ஏதோ ஆரவாரம், பலர் பேசுகிறார்கள், பல்லக்கிலிருந்து இறங்கி ஒட்டக்கூத்தர் உள்ளே வருகிறார். காதில் குண்டலம், தலையில் பாகை, மார்பில் மணிமாலைகள். தோளில் பொன்னாடை ஒரு பெரிய மன்னரைப் போலத் தோற்றம் அளிக்கிறார்.

உள்ளே வருகிறார்.]

கம்பர்: (திரும்பிப் பார்த்தபடியே) ஒட்டக்கூத்தர் வருகிறார் போல் இருக்கிறதே!

திருவள்ளுவர்: ஓ, வாருங்கள், வாருங்கள். கூத்தமுதலியாரவர்களா? யாரோ சக்கரவர்த்தி என்னைத் தேடிக் கொண்டு வருவதாக எண்ணினேன்.

ஒட்டக்கூத்தர்: (வந்து அமர்ந்தபடியே) சக்கரவர்த்திக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாததில் வியப்பே இல்லை. அவன் புவிச்சக்கரவர்த்தி; நான் கவிச்சக்கரவர்த்தி. புவிச்சக்கரவர்த்தியை உலகம் அறிவது நம் கவியினாலே தானே? அவனுக்கு இருக்கும் பெருமையும் செல்வ வாழ்வும் நமக்கும் கிடைப்பது தானே நியாயம்?... இவர் யார்?

திருவள்ளுவர்: கம்பரைத் தெரியாதா உங்களுக்கு? இராமாயணம் பாடிய கவிஞர் பிரான் ஆயிற்றே!

கம்பர்: அப்படியெல்லாம் தாங்கள். சொல்லக்கூடாது. நான் ஒரு சிறிய கவிஞன்; அவ்வளவுதான்.

ஒட்டக்கூத்தர்: கம்பரா! இவரா கம்பர்? இவர் என்னை வந்து பார்க்கிறதே இல்லை. சடையப்ப வள்ளலை அழைத்தால் வருகிறார். இந்த மனிதர் மட்டும் வருவதில்லை.

கோயில்-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/103&oldid=1384079" இலிருந்து மீள்விக்கப்பட்டது