பக்கம்:கோயில் மணி.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைவு

113

தியாகம் செய்கிறீர்கள். ஆண்களுக்கு நாற்பது வயசு என்பது ஒரு வயசு அல்ல. நாற்பது பிராயத்தில் மணம் செய்து கொண்டு பல பிள்ளைகளைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள். உங்களுடைய தூய உள்ளத்தில் எனக்கும் ஓர் இடம் கொடுக்க நீங்கள் துணிந்தால், இந்த உலக வாழ்வே சொர்க்க வாழ்வாகிவிடும் எனக்கு."

“இன்னும் நன்றாக யோசனை பண்ணி உன் தீர்மானத்தைச் சொல்” என்று சொல்லி விடைபெற்றார் அவர்,

அவளுக்கு அவரை மணம் செய்து கொள்வதில் ஆசைதான். கணவன் கிடைப்பது மட்டும் அன்று; கொஞ்சுவதற்கு ஒரு குழந்தையும் உடனே கிடைக்கிறதல்லவா? அவருக்குள்ள பொறுப்பை அவள் ஏற்றுக் கொள்வாள். அந்தக் குழந்தைக்குத் தாய் இல்லாத குறை தீரும்படி செய்யலாம். அவருக்கும் வாழ்க்கைத்துணை இல்லாத குறை தீரும். தனக்கோ?—அவள் இப்போதே இன்பவாழ்வின் உச்சியில் இருப்பதாக எண்ணிப் பூரித்தாள்.

மறுபடியும் அவள் நெஞ்சு சற்றே திசைமாறியது. நாற்பது பிராயத்தில் மணம்செய்து கொண்டு பல பிள்ளைகளைப் பெறும் ஆண்களைப் பற்றித் தான் சொன்னது நினைவுக்கு வந்தது. கல்யாணத்துக்குப் பிறகு அவளுக்கும் குழந்தை பிறக்கும் அல்லவா? அப்போது இந்தக் குழந்தையை அன்பு குறையாமல் வளர்க்க முடியுமா? அவள் கேட்ட பல கதைகள் நினைவுக்கு வந்து குழப்பின. இன்பக் கனவு காணும்போது திடீரென்று படுக்கையிலிருந்து புரண்டு கீழே விழுந்தது போல இருந்தது. மேலே எண்ணத்தை ஒடவிடாமல் நிறுத்தினாள். பிறகு தூங்கிப்போனாள்.

கோயில்—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/119&oldid=1384116" இலிருந்து மீள்விக்கப்பட்டது