பக்கம்:கோயில் மணி.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கோயில் மணி

பழக்கப்பட்ட இடத்தில் மணி வார்க்க ஏற்பாடு செய்து விட்டார்.

சில மாதங்களில் மணியும் வந்தது; மேற்கொண்டு பணமும் வந்து விட்டது. கோயிலில் மணியை வைக்க உயரமான கட்டிடம் கட்டவேண்டும், ஆளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். முருகமுதலியார் ஓரிடத்தைக் குறிப்பிட்டார். அவருக்கு இப்போது குருக்களிடம் ஒரளவு மதிப்பு உண்டாகியிருந்தது. ஆனாலும் சுப்பிரமணியசுவாமி கோயில் குருக்கள் சாயங்கால பூசை செய்வது போல இவரால் செய்யமுடியாது என்ற எண்ணத்தை மட்டும் விடவில்லை.

மணியை வைக்க எங்கே கட்டிடம் கட்டுவது என்பது நிச்சயமாகவில்லை. மணி வந்தாயிற்று. அதை அம்பிகையின் சந்நிதியில் வைத்துப் பூசை கூடச் செய்தாகி விட்டது. கட்டிடம் கட்டும் விஷயத்தில் பெரிய மனிதர்கள் ஆளுக்கு ஓர் இடம் சொன்னார்கள். முருக முதலியார், “சிரமப்பட்டுப் பணம் சேர்த்தவர் எப்படிச் சொல்கிறாரோ, அப்படிச் செய்யலாம்” என்று சொன்னார். இதுவரைக்கும் குருக்கள் தம்முடைய கருத்தைச் சொல்லவே இல்லை.

“நீங்கள் எங்கே கட்டிடம் கட்டலாம் என்று எண்ணுகிறீர்கள்?“ என்று கேட்டார் ஒரு பிரமுகர்.

“என் செயலால் பணம் வரவில்லை. ஈசுவரன் திருவருளால்தான் கிடைத்தது. அவன் திருவுள்ளம் எதுவோ அதன்படிதான் நடக்க வேண்டும்” என்றார், குருக்கள்.

“அவன் திருவுள்ளத்தை எப்படித் தெரிந்து கொள்வது?” என்று கேள்வி கேட்டார் ஒருவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/12&oldid=1382744" இலிருந்து மீள்விக்கப்பட்டது