பக்கம்:கோயில் மணி.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

கோயில் மணி

“அவர் உயிருக்கு மன்றாடிக்கொண்டிருப்பவர் என்ன சொல்லுவார்? இவர் வீட்டை விட்டு வந்த அடுத்த மாசமே அவர் பரலோகம் போய்ச்சேர்ந்தார்.”

“அடடா! அப்புறம்?”

அப்புறம் என்ன? இவர் ஒரு சின்னப் பூந்தோட்டத்தைக் குத்தகைக்குப் பிடித்துப் பூ வியாபாரம் செய்யத் தொடங்கினார். எனக்கும் அது பிடித்ததாக இருந்தது. எங்கள் பழைய தொழில் அல்லவா? எனக்குக்குழந்தைகள் பிறந்தன. ஆனால் வாழ்க்கை சுகப்படவில்லை. கிணற்றில் தண்ணீர் இல்லாமல் தோட்டம் கெட்டுப்போயிற்று. குத்தகைப் பணம் கொடுக்கக் கூடத் திண்டாட்டமாகி விட்டது. இனி நமக்குப் பட்டணந்தான் சரியென்று கடலூருக்கு ஒரு முழுக்குப் போட்டு வந்துவிட்டோம்; மூன்று மாசங்கள் ஆகின்றன.

“நாராயணனும் பூ விற்கிறானா?”

இங்கே முன்போல வாடிக்கைக்கைக்காரர்களைப் பிடிக்க முடியவில்லை. நான்தான் விற்கிறேன். அவர் ஏதாவது கூலிவேலைக்குப் போகிறார்.

“வேலை கிடைக்கிறதா?”

“என்னைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியவில்லையா? வாரத்துக்கு ஒரு நாள் கிடைத்தால் பெரிது. எனக்கும் அவ்வளவு அதிகமாக வியாபாரம் ஆவதில்லை. ஏதோ ஒருவேளை கஞ்சி காய்ச்சிக் குடிக்கிறோம்.”

அவளைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

“உங்களைப் பார்த்ததில் சந்தோஷம். தெய்வத்தைக் கண்டதுபோல இருக்கிறது. ஆனால்...”

அவள் ஏதோ சொல்லத் தயங்குகிறாள் போலிருந்தது. அவள் சுற்று முற்றும் உள்ள செடிகளைப் பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/126&oldid=1384139" இலிருந்து மீள்விக்கப்பட்டது