பக்கம்:கோயில் மணி.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

கோயில் மணி

“பத்து ரூபாய்க்கு நாள் முழுவதும் உழைக்க முடியுமா?” என்று சொல்லி அவள் சிரித்தாள்.

“ஏது? சம்பளம், கணக்கு எல்லாம் பார்க்கிற நிலைக்கு வந்துவிட்டாயா?” என்று முகத்தைச் சுளித்துக் கொண்டே சொன்னேன்; ’நன்றியில்லாத சென்மங்கள்' என்று என் உள்ளே ஒரு குரல் எழுந்தது.

“ஐம்பது ரூபாய் தந்தால் உழைக்கலாம்.”

செங்கமலந்தான் பேசினாள்.'

“என்ன!” எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அஞ்சு ரூபாயைப் பத்து ரூபாயாக்க இவரிடம் நான் கெஞ்சியது கடவுளுக்கல்லவா தெரியும்?

செங்கமலம் கலகலவென்று சிரித்தாள். அவளிடம் அந்தச் சிரிப்பைப் பார்த்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. ஆனாலும் எனக்குக் கோபம் தாங்கவில்லை.

“என்னடி இது நாடகம்?”

செங்கமலம் கையைக் குவித்துக் கும்பிட்டாள்; “பெற்ற தாயிடத்தில் பேரம் பேசின என் நாக்கை அறுத்துவிடுங்கள், அம்மா. விளையாட்டுக்குச் சொன்னேன். நாங்கள் இருவரும் ஒரு யோசனை பண்ணினோம். உங்களிடம் இந்தப் பத்து ரூபாயைக்கூட வாங்காமல் உழைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.”

‘ஐம்பது ரூபாய் சம்பளம் கேட்டவள் இப்போது பத்து ரூபாய்கூட வேண்டாம் என்கிறாளே! இது என்ன சாலக்கு?’ நான் விழித்தேன்,

“என்னைப் பெற்ற தாய் நீங்கள்; தெளிவாகச் சொல்கிறேன். இங்கே இன்னும் பல செடிகளை வைத்துத் தோட்டத்தை விருத்தி பண்ண அவர் ஆசைப்படுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/136&oldid=1384207" இலிருந்து மீள்விக்கப்பட்டது