பக்கம்:கோயில் மணி.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

கோயில் மணி

அவளைத் தனக்குக் காரியதரிசியைப் போல வைத்துக் கொண்டிருந்தாள். ஏதோ அவ்வப்போது பொருளுதவி செய்து வருவாள். அவளும் தோழியாகையால் நளினிக்கு உதவியாக இருந்துவந்தாள்.

குழந்தை மோகன் எப்போதும் ஆயாவின் பராமரிப்பில்தான் இருந்துவந்தான். அவனைக் குளிப்பாட்டுவது, சோறு ஊட்டுவது, விளையாட்டுக் காட்டுவது, வெளியே அழைத்துச் செல்வது - எல்லாம் வள்ளியின் வேலை. ஓர் அம்மாள் காலையில் அரை மணியும் மாலையில் அரை மணியும் வந்து அவனுக்குப் பொம்மை, படங்களையெல்லாம் காட்டி, “கழுதை, பூனை” என்று பாடம் சொல்லிக் கொடுத்துப் போவாள்.

நளினி புறப்பட்டுப் போன சிறிது நேரத்துக்கெல்லாம் தமயந்தி வந்தாள். நளினியின் பொதுத் தொண்டு சம்பந்தமான அலுவல்களைக் கவனிக்கத் தனி அறை ஒன்று அங்கே உண்டு. பல பைல்களும் புத்தகங்களும் வருவாரை வரவேற்க நாற்காலிகளும் உள்ள இடம் அது, தமயந்தி அங்கே போய்க் கவனிக்க வேண்டிய கடிதங்களைப் பார்த்தாள். சமையற்காரி வந்தாள்: “இன்று ராத்திரி பத்து மணிக்கு ஏதோ மீட்டிங்காமே! அதில் அம்மாள் பேச ஏதோ குறிப்பு வேண்டுமாம். நேற்று உங்களிடம் சொல்ல மறந்து விட்டார்களாம். உங்களைக் குறித்துவைக்கச் சொன்னார்கள்” என்றாள்.

“சரி, பார்க்கிறேன்” என்று சொல்லி நாற்காலியில் அமர்ந்தாள் தமயந்தி.

டெலிபோன் ஒலித்தது. “ஹலோ, நான் தான் தமயந்தி... கொஞ்சம் வேலை இருந்தது. சரி, சரி. சொன்னாள்... பார்க்கிறேன்... குழந்தைக்கு உடம்பு சரி இல்லை. இருக்கிறாள்... அம்மாதான் பார்த்துக்கொள்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/142&oldid=1384219" இலிருந்து மீள்விக்கப்பட்டது