பக்கம்:கோயில் மணி.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"இப்படிக் குழந்தையினிடம் நீ உட்கார்” என்றாள் நளினி, வள்ளி சிறிது அஞ்சினாள். நளினி தான் எழுந்து அவளுக்கு இடம் கொடுத்தாள்.

நளினி குளிப்பறைக்குள்ளே போய்க் கதவைத் தாழிட்டுக்கொண்டு கால்மணி அழுது புலம்பினாள். தான் இழந்தது இன்னதென்று அவளுக்குப் புலனாயிற்று.

மறுபடியும் குழந்தை படுத்திருந்த அறைக்கு வந்தாள்: “சங்கன் யார் வள்ளி?” என்று கேட்டாள்.

"சங்கன் இல்லையம்மா, சங்கரன். நம்ம ராசா அவனைச் சங்கன்னுதான் கூப்பிடும். என் பேரப்புள்ளையம்மா."

"அவனை இங்கே அழைத்து வரச் சொல்.”

“எதற்கு அம்மா?”

“இவனுக்குத் துணையாக இருப்பதற்கு.”

“அவன் வந்து என்ன செய்வான் அம்மா?”

“டாக்டர் இவனுக்குப் பிரியமானவர்கள் உடன் இருக்க வேண்டுமென்று சொன்னார் அல்லவா?”

“நீங்களெல்லாம் இருக்கிறீங்களே!”—வள்ளி இயல்பாகத்தான் கேட்டாள்.

"நாங்களா?" மேலே நளினிக்கு வார்த்தை வரவில்லை. விம்மத் தொடங்கினாள்.

டுத்த மாதம் குழந்தை செளக்கியமாகி விளையாடத் தொடங்கினன். நளினி எல்லாச் சங்கங்களுக்கும் கால் கால் கடிதாசு அனுப்பினாள்; ராஜீநாமாக் கடிதந்தான். அன்று முதல் அவள் உண்மைத் தாயாகிக் குழந்தை மோகனுடன் ஒட்டிக்கொள்ளும் தூய திருத்தொண்டிலே ஈடுபட்டு விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/152&oldid=1384238" இலிருந்து மீள்விக்கப்பட்டது