பக்கம்:கோயில் மணி.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாடு மேய்க்கும் கண்ணன்

13

தினந்தோறும் காலையில் தனுர்மாச பஜனை முடிவில் குழந்தைகள் பலர் வந்து நாமாவளி சொல்லிவிட்டுப் பொங்கல் பிரசாதம் பெற்றுப் போவார்கள். சேரியிலிருந்தும் குழந்தைகள் வருவார்கள்; அவர்களும் நாமாவளியைச் சொல்லிப் பிரசாதம் வாங்கிப்போவார்கள். சாதி வேறுபாடு சிறிதும் இன்றி, எல்லாக் குழந்தைகளும் குதூகலமாக நாமாவளி சொல்வதைப் பார்த்தாலே ஒரு தனியான உணர்ச்சி எழும். இதனால் குழந்தைகளுக்குள் ஒரு கூட்டுற வுணர்ச்சி உண்டாகி வந்தது.

அந்தக் குழந்தைக் கூட்டத்தில் ஒரு பையன்; நல்ல கறுப்பு: வயசு ஏழு இருக்கும். அவனுக்குப் பக்கத்தில் தினமும் ராமு உட்கார்ந்து நாமாவளி சொல்வான். “ராதா கிருஷ்ணா!” என்று யாராவது பெரியவர் சொன்னால், குழந்தைகள் அத்தனை பேரும், “கோபால கிருஷ்ணா!” என்று எதிரொலி கொடுப்பார்கள்.

ராமுவுக்கு அந்தக் கறுப்புப் பையனிடம் ஒரு தனியான பிரியம். அவன் மாடு மேய்க்கிறதை ராமு பார்த்திருக்கிறான். “உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.

“காத்தான்” என்றான் அவன்.

“இல்லை; நீ கண்ணன். உன்னை நான் கண்ணன் என்றே கூப்பிடப் போகிறேன்” என்றான் ராமு. அன்று முதல் காத்தான் அவனுக்குக் கண்ணனாகிவிட்டான்.

“இவனும் குண்டு மூஞ்சியாய்க் கறுப்பாய் இருக்கிறான்; மாடு மேய்க்கிறான். கண்ணன் இவனைப் போலத்தானே இருப்பான்?” இப்படி அந்தப் பிஞ்சு நெஞ்சில் எண்ணம் ஓடியது. தனக்குக் கிடைக்கும் பொங்கல் பிரசாதத்தையும் அவன் கையில் கொடுத்து விடுவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/19&oldid=1382760" இலிருந்து மீள்விக்கப்பட்டது