பக்கம்:கோயில் மணி.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

கோயில் மணி

“இந்தா, பார் அம்மா!” என்று பால்காரர் குவளையை ஒரு சுழற்றுச் சுழற்றுவார். அதில் தண்ணீரே இல்லை என்று சாதிப்பதற்காகச் செய்யும் காரியம் அது. பந்தாட்டக்காரர்கள் நெளிவு சுளுவுகளுடன் மட்டையைச் சுழற்றி அடிப்பார்களாம். அதைப்பற்றிப் பிரமாதப்படுத்திப் பத்திரிகையில் படம் போடுகிறார்கள். இந்தப் பால்காரர் குவளையைச் சுழற்றுவதில் ஆயிரத்தில் ஒரு பங்கு சாமர்த்தியம் அதில் உண்டா? நாட்டியத்தில்கூட இப்படிச் செய்பவர் மிகவும் அரியர்.

குவளை ஒருமுறை மேல் போய் கீழ் வரும். அதன் வாய்கூடக் கீழே இருக்கும்படி ஒரு நிலை உண்டு. தண்ணீர் உள்ளே இருந்தால், குவளை தலைகீழாக வரும்போது விழாதா என்று என் மனைவி நினைத்துக் கொண்டிருப்பாள். ஆனால் அந்தக் கலைஞர் - பால்காரரைத்தான் சொல்கிறேன் - கண் முன்னால் குவளையைத் தலைகீழாக ஒருகணம் வரும்படி செய்து தண்ணீரைக் குவளையிலிருந்து விழாதபடி செய்து விடுகிறார். என்ன மாயமோ! மந்திரமோ!

சில சமயங்களில் பால்காரருடைய உதவியாள் பால் கறக்க வருவான். அவனுக்குக் குவளை வித்தையில் முழுத்திறமை இராது. ஒரு குவளையை நன்றாகக் கவிழ்த்துக் காட்டிவிட்டுப் போவான். மாட்டுக்கு அருகில் மறைவாக வைத்திருக்கும் வேறு குவளையை எடுத்துக் கறப்பான். அதில் தண்ணீர் இருக்கும். இதை என் மனைவி ஒருநாள் கண்டு பிடித்து விட்டாள். அவன் குவளையைக் காட்டாமல் கறந்து கொண்டே இருந்தான். “இன்றைக்குப் பால் வேண்டாம், போ” என்று மறுத்து விட்டாள். அவன் போய்விட்டான்.

காலையில் உரிய நேரத்தில் காபி அருந்தாவிட்டால் யாருக்குத்தான் வேலை ஓடும்? பால்காரர் வீட்டுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/32&oldid=1382783" இலிருந்து மீள்விக்கப்பட்டது