பக்கம்:கோயில் மணி.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பழைய குருடி

33

நான் விற்றுத் தருகிறேன்!” என்று கிண்டலாக வேறு சொல்லிப் போனார்.

இப்போது மாடு முன் போலப் பால் தரவில்லை. அளவு குறைந்து விட்டது. “பால் மறுக்கிற காலம். இனிமேல் இதைச் சினைக்கு விட வேண்டியதுதான்” என்றான் ஆள்காரன்.

இப்படி ஒரு சந்தர்ப்பம் வருமென்று நான் கற்பனை கூடச் செய்யவில்லை. மாட்டைப் பற்றிப் பிரசாரம் செய்த நண்பரிடம் போய், “இந்தச் சங்கடத்துக்கு என்ன செய்வது?” என்று கேட்டேன்.

அவர் சிரித்தார். “உங்களுக்கு இயற்கையின் போக்கே தெரியாதா? இது எங்கும் நடக்கிறது தானே? இதற்காகக் கலவரப்படலாமா?” என்று அமைதியாகப் பேசினார்.

“பால் கறக்கா விட்டால் பால் வேண்டுமே! அந்த மாட்டுக்குத் தீனி போடவேண்டுமே! அது வீண் செலவு அல்லவா? மறுபடியும் அது பால் கறக்கும்படி செய்ய என்ன செய்வது?”

அட பைத்தியக்கார மனிதரே! மறுபடியும் மாடு கன்று போட்டால் பால் கறக்கும். எனக்குத் தெரிந்த ஆள் ஒருவன் இருக்கிறான். அவனிடம் மாட்டையும் கன்றுக்குட்டியையும் விட்டு விடுங்கள், அவன் மாட்டைச் சினையாக்கிக் காப்பாற்றிக் கன்று போட்ட பிறகு கொண்டுவந்து விடுவான். கன்றுக் குட்டியையும் வளர்த்து விற்றுத் தருவான்.”

“அவன் மாட்டுக்குத் தீனி போட வேண்டாமா?”

“அவன் திருவான்மியூரில் மேய்ச்சல் தரையில் மாடுகளை மேய்த்துக் கொள்வான். மாதம் இருபது ரூபாய் கொடுத்தால் போதும்” என்றார்.

கோயில்-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/39&oldid=1382799" இலிருந்து மீள்விக்கப்பட்டது