பக்கம்:கோயில் மணி.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

கோயில் மணி

கோடைக்காலத்தில் வானம் மாசு மறுவின்றி இருக்கும். சூரியன் மலைவாயில் விழும் நேரம் நன்றாகத் தெரியும். அந்தச் சமயத்துக்குச் சுவாமிக்குத் தீபாராதனை செய்ய வேண்டுமென்று முதலியார் குருக்களை வற்புறுத்துவார். அவர் சிவன் கோயிலுக்குப் பரம்பரைத் தருமகர்த்தர். கூடிய வரையில் குருக்கள் அப்படியே செய்வார். சூரியன் தெரியாமல் மந்தாரமாக இருந்தாலும் மழை பெய்தாலும் அஸ்தமன நேரம் குருக்களுக்குத் தெரியாது. ஏதோ ஒரு மதிப்பாக ஆறேகால் மணி, ஆறரை மணிக்குத் தீபாராதனை செய்வார்.

சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அப்படி அன்று. அங்குள்ள முத்துசாமி குருக்கள் சாயங்கால தீபாராதனை செய்தாரானால் நிச்சயமாகச் சூரியன் அந்தக் கணத்தில் மலை வாயில் விழத்தான் வேண்டும். ஒரு நிமிஷம் இந்தண்டை அந்தண்டை இருக்காது. முன்பே அபிஷேகம் செய்து அலங்காரம் பண்ணி நைவேத்தியமும் பண்ணி விடுவார். மணியடித்ததுபோல் டாண் என்று சூரியாஸ்தமனவேளையில் கர்ப்பூர ஆரத்தி காட்டுவார். சூரியன் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் அவர் தீபாராதனை செய்யும் நேரத்தில் அவன் மறைவான் என்பதில் அணுவளவும் ஐயம் இல்லை.

இது எப்படி அவரால் முடிந்தது என்று வியப்படையலாம். இது ஒன்றும் பிரமாதமான காரியம் அன்று. முத்துசாமி குருக்களுக்குச் சோதிடம் வரும். ஜாதகம் எழுதித் தருவார். கணிதமும் தெரியும். இன்ன அட்சாம்சத்தில் உள்ள ஊரில் இன்ன நாளில் அகஸ்–அதாவது பகல்நேரம்-இவ்வளவு, இது உதய காலம், இது அஸ்தமன காலம் என்ற கணக்கெல்லாம் அவருக்குத் தெரியும். முன்கூட்டியே அவர் இதை ஒரு வாரத்துக்குத் தெரிந்து எழுதிவைத்துக் கொள்வார். கோயிலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/8&oldid=1382730" இலிருந்து மீள்விக்கப்பட்டது