பக்கம்:கோயில் மணி.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

கோயில் மணி

கூட்டத்தில் வந்து அமர்ந்தார்கள், கண்ணனும் நாரதரும். நாரதர் அந்தப் பாட்டைக் கேட்டு மெய்ம் மறந்து போனார், ஒரு பாட்டு முடிந்தது. அங்கே ஏதோ கிசுகிசு என்ற குரல் கேட்டது. பாடின பெண், “தாராளமாகப் பாடட்டுமே”! என்ருள். ஒரு பாகவதர் முன்னே வந்து உட்கார்ந்தார்.

அப்போது கூட்டத்தின் ஒரு மூலையிலிருந்து, “வேண்டாம், எழுந்து போ!” என்ற குரல்கள் எழும்பின. பாடின. பெண்மணி அந்தப் பக்கமாகப் பார்த்துப் புன்முறுவல் பூத்தபடி தன் கையால் அமர்த்தி, “அவர் பெரியவர்; பாடட்டும்” என்றாள்.

அந்த ஆணைக்கு அடங்கினர் அந்த இளவட்டங்கள். சிறிது நேரம் பேசாமல் இருந்தார்கள். பாகவதர் நன்றாகத்தான் பாடினார். ஆனாலும் முழுதும் கேட்க அவர்களுக்குப் பொறுமை இல்லை. “போதும், போதும்” என்ற குரல்களும் கைதட்டல்களும் ஒலித்தன. அந்தப் பெரியவர் ஒரு புண்டரிகம் போட்டுவிட்டு நிறுத்திக் கொண்டார்.

மறுபடியும் அந்தப் பெண் பாடினாள். கண்ணன் நாரதருக்குக் கண்சாடை காட்டினன். எதிர்ப்பு வந்த கூட்டத்திற்குப் பக்கத்தில் போய் உட்காரச் சொன்னான். அவர் அவன் குறிப்பறிந்து அங்கே போய் உட்கார்ந்து, கண்மூடியபடியே பாட்டை ரசித்துக் கொண்டிருந்தார்.

“இந்தப் பைத்தியம் அங்கேயிருந்து ஏன் இங்கே வந்தது?”—ஒரு குரல். இது அரை குறையாக நாரதர் காதில் விழுந்தது.

“போகட்டும், கிழம். பாட்டிலே லயித்துவிட்டது. கண்ணை மூடிக்கொண்டு யோக சமாதியில் இருக்கட்டும்.”—இப்படி ஒரு பேச்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோயில்_மணி.pdf/94&oldid=1384045" இலிருந்து மீள்விக்கப்பட்டது