பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் கல்லி நிலை

105



கல்விப் பயிற்சிக்குரிய நூலினை ‘எண்’ எனவும் ‘எழுத்து’ எனவும இரு பகுதியாகப் பண்டைத தமிழ மக்கள் வகைப்படுத்தினார்கள். காலம், இடம், பொருள் என்பவற்றின் அளவினை உள்ளத்தால் எண்ணிக் கூறுபடுத்தி அறிதற்குரிய பயிற்சியினை வளர்க்குங் கருவி ‘எண்ணூல்’ என வழங்கப் பெறும். எண் என்னும் சொல் இக்காலத்தில் ‘கணிதம்’ என்ற பொருளில் வழங்குகின்றது. மிகப் பெரிய அண்டங்களையும் மிகச் சிறிய அணுவினையும் எண்ணியறிதற்குரிய பேரெண்களையும் சிற்றெண்களையும் தமிழ் முன்னோர் முன்னரே கண்டறிந்திருந்தனர்.

அண்டம் முதலிய பொருள்களின் அகலம், நீளம், நிறை முதலியவற்றை அளந்து கூறுதற்குரிய கோடி, சங்கம், தாமரை, நெய்தல், வெள்ளம் முதலிய பேரெண்களும், ஒரு பொருளையே பன்னுாறு கூறாகப் பகுத்துணர்தற்குரிய காணி, முந்திரி முதலிய சிற்றெண்களும் தமிழ் மக்களால் முன்னரே இயற்றப் பெற்றுள்ளன. கணக்கினைக் ‘கருவி, செய்கை’ என இருவகையாகப் பிரித்து விளக்கிய ஏரம்பம் முதலிய தமிழ்க் கணக்கு நூல்கள் தம் காலத்திலிருந்தனவெனப் பரிமேலழகர் கூறுகின்றார். சிந்தைக்கும் மொழிக்கும் அப்பாற்பட்ட முதற்கடவுளாகிய இறைவன் ஒருவனைத் தவிர, ஏனைய எல்லாப் பொருள்களும் இவ்வெண்ணூலின் வரம்புக்குட்பட்டுத் தோற்றுவனவே என்பது தமிழ் மக்களின் துணிபாகும் [1].

இனிக் கல்வியின் இரண்டாவது பிரிவாகச் சொல்லப்பட்ட எழுத்தென்பது, இயற்றமிழ் நாலாகும். உலகில் உள்ள பொருள் எல்லாவற்றையும் உயர்திணை, அஃறிணை என இரண்டாகப் பகுத்து, அவற்றின் இயல்பினை உள்ள-


  1. திருக்குறள் 392 பரிமேலழகர் உரை.