பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் கல்வி நிலை

123

காலத்திலே தமிழ் மக்கள் வளர்த்த இயலிசை நாடகம் என்ற முத்தமிழும் விரிந்த பல துறைகளையுடையவை என்பது இனிது புலனாதல் அறிக.

தமிழ் நாட்டில் ஊர்தோறும் இளஞ்சிறார்கட்குத் தொடக்கக் கல்வியினைச் சொல்லிக்கொடுக்கும் தெற்றிப் (திண்ணைப்) பள்ளிக்கூடங்கள் இருந்தன. அங்கே இள மாணவர்களுக்கு நெடுங்கணக்கு முதலிய அடிப்படைக் கல்வியினைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் பலர் இருந்தனர். அங்குப் பயிலும் மாணவர்களை 'மையாடலாடல் மழ புலவர்' எனப் பரிபாடல் கூறுகின்றது. இளம்பருவ மாணவர்களைப் பயிற்றும் ஆசிரியர்கள் 'இளம்பாலாசிரியர்’ (தொடக்கப்பள்ளி ஆசிரியர்) என வழங்கப்பெற்றார்கள். மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் . எனக் கடைச்சங்கப் புலவரொருவர்க்கு வழங்கும் பெயரால் இச்செய்தி உணரப்படும். நெடுங்கணக்கு முதலிய தொடக்கக் கல்வியினைச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் 'கணக்காயர்’ என்ற பெயரால் குறிக்கப் பெற்றனர். உயர்ந்த கல்வியைச் சொல்லிக்கொடுப்போர் 'ஆசிரியர்' என வழங்கப்பெற்றனர். சிறுவர்கட்குக் கல்வியினைக் கற்பிக்கும் பொறுப்பினையும் செலவினையும் பெற்றோர்களே ஏற்றுக்கொண்டார்கள்.

'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.’

(குறள், 69)


'சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே.'

(புறம், 312)


என்பவை ஈண்டு நினைக்கற்பாலன. உயர்ந்த கல்வியினைப் பெறும் விருப்பமுடையவர், ஆசிரியர்க்கு வேண்டும் உதவி-