பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

சங்ககாலத் தமிழ் மக்கள்

ஞர்களாயினும், தங்கள் பசியினைத் தீர்த்தற்குரிய உணவினைப் பெறுதல் வேண்டி உழவரது கையினையே எதிர் பார்த்து நிற்பர். மெய்ம்முயற்சியுடைய இவ்வுழவினைச் செய்து உணவினை உண்டாக்கும் ஆற்றலின்றிப் பிற தொழிலை மேற்கொள்வார் எல்லாரையும் உணவளித்துப் பாதுகாத்தலால், உலகியல் வாழ்வாகிய தேர்க்கு அச்சாணி போன்று உதவி செய்பவர் இவ்வுழவரேயாவர். யாவரும் பசி நீங்க உண்ணும்படி உழுதலைச்செய்து, அதனால் தாமும் உண்டு, பிறர் கையை எதிர்பாராது உரிமையுணர்ச்சியுடன் வாழ்க்கை நடத்தும் திறமுடையார் உழவரே. ஏனைய தொழிலாளரெல்லாம் பிறரையடுத்து அவர்தம் ஆதரவு பெற்று வாழ வேண்டிய எளிமை நிலையினரே என்பது அறிஞர் துணிபு. பிறர்பாற் கையேந்தி நில்லாத பெருமையும், இரப்பார்க்கு இல்லையென்னாது வழங்கும் வண்மையும் உழவர்க்கு இயல்பாக அமைந்த பண்புகளாகும்.

குறையாத விளையுளைச் செய்யும் உழவர்கள் வாழும் நிலப் பகுதியே நாடெனச் சிறப்பித்துரைக்கப்படும். தம் முயற்சியால் விளைந்த நெற்கதிர் நீழலில் வாழ்வாராகிய உழவர், தாம் விளைத்துக் கொடுத்த உணவின் ஆற்றலால் பல வேந்தர் ஆட்சியிலமைந்த நிலப்பரப்பு முழுவதையும் தம் வேந்தன் ஆட்சியில் அடங்கச் செய்வர் என்பர்.

'பரப்பு நீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர், இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்,' என இளங்கோவடிகள் சோழநாட்டு உழவர்களைப் பாராட்டுகின்றார். நீரின் துணைகொண்டு தொழில் செய்வார் உழவராதலின், அவர்களைப் 'பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்' என அடிகள் சிறப்பித்தார். பசியால் வருந்தியிரக்கும் எளியாருடைய சுற்றத்தையும்,