பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழர் தொழில் நிலை

127



நாட்டினைக் காக்கும் அரசரது வெற்றியையும், தம் உழவினிடத்தே ஒரு சேர விளைவிக்குத் திறமையுடையவர் உழவராகலின், அவர்கள் வாழும் ஊர்களைப் 'பழவிறல் ஊர்கள்' எனச் சேர முனிவர் பாராட்டிப் போற்றினார். சங்ககாலத்தில் வாழ்ந்த உழவர், நிலத்தினைத் தம்முடையதாகக் கொண்ட காணியாளராய் விளங்கினமையால், எப்பொழுது பார்த்தாலும் தமக்குரிய நிலத்தினைப் பண்படுத்துந் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பலம் நிறையுள்ள மண்ணானது காற்பலம் நிறையுள்ளதாகும்படி நிலத்தினை ஆழ உழுது புழுதியாக்கினால், ஒரு கைப்பிடி எருக்கூட நிலத்திற்கு இட வேண்டாமல், உணவுப் பொருள்கள் நிறைய விளைவனவாம் என்பதைப் பண்டைத் தமிழர் கண்டுணர்ந்தனர். ஆழ உழுவதோடமையாமல், விளைவுக்கு ஆக்கந்தரும் எருவினைக் கண்டுணர்ந்து அதனை நிலத்திற்கு இட்டனர். விளை நிலத்திலே பயிருக்குத் தடையாய் வளர்ந்த களைகளை அவ்வப்பொழுது களைந்தெறிந்தனர். சுருங்கக்கூறினால், பயிர்த்தொழிற்குரிய பல வகை நுட்பங்களையும் தம் தொழிற் பயிற்சியால் கண்டு பயன்படுத்திய பெருமை நம் தமிழ் நாட்டு உழவர்களுக்கு உரியதெனக் கூறலாம். நாட்டில் மக்கள் தொகை பெருகப் பெருகத் தமக்குள்ள சிறிய நிலத்திலே நிறைந்த உணவினை விளைக்க வேண்டிய பொறுப்பு உழவர்களுக்கு உரியதாயிற்று. எனவே, அவர்கள் தாங்கள் தொன்றுதொட்டுப் பயின்று வரும் அத்தொழிலை மேன்மேலும் திருத்தமுற வளர்த்து வரத் தொடங்கினார்கள். அதனால், ஒரு வேலி நிலத்தில் ஆயிரக் கல நெல் விளைதற்கேற்ற வாய்ப்பு உண்டாயிற்று. தாழ்ந்த உணர்வுடைய விலங்குகளாகிய எருதுகளை உழவிற் பழக்கிப் பயிர் செய்து அவற்றுக்கு வேண்டும் வைக்கோல் முதலிய உணவினைத் தந்து பாது-