பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் கண்ட வருங்காலத் தமிழகம்

139

என்றும் சங்ககாலத் தமிழ் மக்கள் உய்த்துணர்ந்தமை தமிழ் நூல்களால் நன்கு துணியப்படும். வாழ்க்கையிற் காணப்படும் நலம் தீங்குகளைத் தெளியவுணர்ந்து தீதொரீஇ நன்றின்பாற் செலுத்தும் நல்லறிவுடையாரே பண்டை நாளிற் புலவரெனப் போற்றப் பெற்றனர். கற்றற்குரிய நூல்களைப் பழுதறக் கற்றுக் கற்ற அம்முறையிலே நல் வழிக்கண் ஒழுகி உறுதியுடைய நற்பொருள்களைப் பிறர்க்கு அறிவுறுத்தி வாழ்க்கையைத் திருத்தமுடைய தாக்குதல் பழந்தமிழ்ப் புலவர்களின் தொழிலாய் அமைந்தது.

செல்வ வறுமைகளாலும், உலகியலிற் பேசப்படும் பிற தொழில் வேற்றுமைகளாலும் அடக்கப்படாது, எல்லா வேற்றுமைகளையும் கடந்து விளங்குவது புலமையாகும். புலமையுடையார் அவ்வேற்றுமைகளை ஒரு பொருளாக எண்ணமாட்டார். 'பகைவர் இவர்; நட்பினர் இவர்', என்னும் வேற்றுமை இறைவனுக்கு இல்லாதவாறு போலப் புலவர்க்கும் அத்தகைய வேற்றுமை இல்லையென்பதனைச் செந்தமிழ்ப் புலவர் நன்குணர்ந்திருந்தனர். ஒரு வரை விரும்புதலும் வெறுத்தலுமில்லாது தமிழகத்திற் புலமைத் தொண்டாற்றிய புலவர்களைத் தமிழரனைவரும் இகலிராலாய் ஒருமித்துப் போற்றி வந்தனர். தம்முட் பகை கொண்ட தமிழ் வேந்தரிடையே ஒருபாற்படாது நடுநிலையிற் பழகுந்திறம் அக்காலத் தமிழ்ப் புலவர்பால் நிலை பெற்றிருந்தது. இங்ஙனம் பக்கத்துள்ளார் இயல்பறிந்தொழுகும் பண்புடைமையை மக்கள் மனத்தே வளர்த்த பெருமை தமிழ்ப் புலவர்க்கே சிறப்பாக உரியதாகும்.

வயிற்றுப் பிழைப்பினைக் கருதிக் கல்வியைக் கற்றல் புலவர் செயலன்றாம். கல்வியிலே கருத்துடையராய்ப்