பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

சங்ககாலத் தமிழ் மக்கள்


இங்ஙனம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே புலமை நலம் பெற்று அறிவிலும் வீரத்திலும் மேம்பட்டு விளங்கிய தமிழகத்தை இன்று நம் மனக்கண்முன்நிறுத்துவன பண்டைத்தமிழ்ப் புலவர்களால் இயற்றப்பெற்ற தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகிய செந்தமிழ் நூல்களேயாகும். இவற்றைத் தம் புலமைத் திறத்தால் ஆக்கியளித்த நல்லிசைப் புலவர்கள் தாங்கள் நேரிற் கண்ட தமிழகத்தைத் தங்கள் வழியினராகிய பிற்காலத் தமிழரும் உணர்ந்து போற்றும் முறையில் தங்கள் வாய்மொழிகளால் உருவாக்கிக் காட்டியுள்ளார்கள். இவர்களால் இயற்றப்பெற்ற சங்க நூல்களைக் கருவியாகக் கொண்டு ஆராயுங்கால் கற்பார் மனக்கண்முன்தோன்றும் தமிழகத்தின் பரப்பும், அதன் வளங்களும், அங்கு வாழ்ந்த தமிழரது குடி வாழ்க்கையும், ஆடவர் பெண்டிர் என்பவர்க்குரிய சிறப்பியல்புகளும், தமிழ் மக்களது கல்விப் பயிற்சியும், தொழில் வன்மையும் இன்ன இன்ன என முன்னர் ஒருவாறு சுருக்கமாக விளக்கப் பெற்றன. இனி, சங்க காலத்தே வாழ்ந்த செந்தமிழ்ப் புலவர்கள் தங்கள் உள்ளத்திலே எதிர்காலத் தமிழக வாழ்வினைப்பற்றி எங்ஙனம் எண்ணினார்கள் என்பதனை அவர்களாற் பாடப்பெற்ற செய்யுட்களால் உய்த்துணர்தல் வேண்டும்.

ஆசிரியர் திருவள்ளுவனார் தம் உள்ளத்திற்கருதிய எதிர்காலத் தமிழகத்தின் இயல்பு திருக்குறளில் 'நாடு' என்னும் அதிகாரத்தால் நன்கு விளக்கப் பெறுகின்றது. குறையாத உணவுப்பொருளை விளைவிக்கும் உழவர்களும், நடுவு நிலைமை வாய்ந்த சான்றோர்களும், முயற்சியுடைய பெருஞ்செல்வர்களும் ஒருங்கு வாழ்தற்கு நிலைக்களமாவதும், அளவிறந்த பொருளுடைமையால் எல்லா நாட்டின