பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

சங்ககாலத் தமிழ் மக்கள்


ஆடலும் ஒன்றுபட்டு நிகழ்ந்த செயலுக்குச் சேர சோழ பாண்டியர் மூவரும் அரசவையிலே சேர இருந்த ஒற்றுமைத் தோற்றத்தை முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர் உவமையாகக் கூறுகின்றார் [1]. இவ்வுவமையால் தமிழரசர் மூவரும் தம்முள் ஒற்றுமையுடையவராய் அரசியலை நன்கு நிகழ்த்தித் தமிழ் மக்களை மகிழ்வித்தனரென்பது நன்கு புலனாகும்.

இங்ஙனம் தமிழ் வேந்தரிடையே காணப்பெற்ற ஒற்றுமைத் திறம், பிற்காலத்தில் இந்நாட்டிற் குடி புகுந்த அயலாரது கூட்டுறவால் சிதையத் தொடங்கியது. தமிழ்க் குலத்தாருடன் தொடர்பில்லாத அயலார் சிலர் தமிழ் வேந்தர் மூவரையும் தனித்தனியே அணுகி, அவர்தமை உயர்த்திப் புகழ்ந்து, ஒரு குடும்பத்தவராய் வாழ்ந்த அம் மூவரையும் பேதித்துப் பிரித்து வைக்குங் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அதனால், மூவேந்தரும் தொன்று தொட்டு வரும் தம் உறவினை மறந்து, தமக்குள் பகைமை பாராட்டுவாராயினர்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒரு நாள் சோழர் பேரவையில் ஒருங்கு வீற்றிருந்தனர். அவ்விருவருடைய ஒற்றுமைத் தோற்றத்தைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவர்


  1. ‘பீடுகெழு திருவின் பெரும்பெயர் நோன்றாள்
       முரசமுழங்கு தானை மூவருங் கூடி
       அரசவை யிருந்த தோற்றம் போலப்
       பாடல் பற்றிய பயனுடை யெழாஅல்
       கோடியர் தலைவ!’
    -பொருநராற்றுப்படை