பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆடவர் நிலை

67

இடையூறுகளையும் அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரத்தினாலும், பலரும் தன்னைப் பாராட்ட வாழும் புகழினாலும், தானீட்டிய பொருளை இரவலர்க்கு வரையாது வழங்கும் வண்மையினாலும், ஒருவன் தன் வாழ்நாளில் எல்லாரையும் விட மேன்மேல் உயர்ந்து விளங்கும் பெருமையினைப் பெறுகின்றான். இவ்வுலகியலில் நேரும் பலவகை இடையூறுகளையும் தடுத்து நின்று உலகில் அமைதி நிலவப்பாடுபடும் உணர்வுமிக்க அவனது உள்ளத்திண்மையே 'உரன்' எனக் குறிக்கப்படுவதாம். தான் கொண்ட கொள்கையினை நெகிழ விடாத உறுதியும், மனத்தினை நன்னெறிக் கண் நிறுத்தும் கட்டுப்பாடும், எந்த வினையையும் மயங்காது எண்ணித் துணியும் துணிபும், திண்ணிய அறிவாகிய உரனுடைமையின் திறங்களாகும். மலையே வந்து வீழ்ந்தாலும் நிலைகலங்காத உள்ளத்திண்மையுடையவனே 'உரவோன்' எனப் போற்றப் பெறுபவனாவன்.

உரவோர் வாழும் நாடே உரிமை வாழ்வு உடையதாகும். தான் செம்மையாக வாழ்தற்கும், தன்னாட்டு அரசியல் செம்மையுறுதற்கும் உரனுடையாளனது உழைப்பே இன்றியமையாததாகும். சங்க காலத்தில் வாழ்ந்த ஆடவர்கள் அரசியல் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் தலைவர்களாய் நின்று வினைசெய்தற்குரிய பெருமையும் உரனும் பெற்றிருந்தார்கள். மக்கள் பிற்காலத்தில் அடையும் பெருமைகளுக்கெல்லாம் அரண்செய்வன அவர்கள் இளமையிற் பழகும் விளையாட்டுக்களேயாம்.

தமிழிளைஞர்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதியினை விளைக்கும் விளையாட்டினை மேற்கொண்டிருந்தார்கள். நீர்நிலையிலும் பேராறுகளிலும் கடலிலும் குதித்து நீந்துதலும், விற்போர் மற்போர் முதலிய போர்த் துறையில்