பக்கம்:சங்ககாலத் தமிழ் மக்கள்-3.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

சங்ககாலத் தமிழ் மக்கள்


நிறைவேற்றுதல் கருதி ஆடவர்களைப் பெற்றுக்கொடுத்தல் பின்னுள்ளார்க்குரிய கடமையாய் அமைந்தது (பதிற்றுப்பத்து.70).

தமிழ்நாட்டின் தென்பகுதி கடலாற்கொள்ளப்பட்டமையால், அங்கிருந்து புகழுடம்பினை நிலைநிறுத்தி மறைந்த தம் முன்னோர்களைத் தென்புலத்தார் (தென்றிசையில் வாழ்வார்) எனத் தமிழர் வழிபடுவாராயினர். 'தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்' (புறம்.9) எனப் புலவரொருவர் ஆண்மக்களைச் சிறப்பித்துப் பாராட்டுகின்றார்.

மணஞ்செய்துகொள்வதற்கு முற்பட்ட பருவம் காளைப்பருவம் ஆகும். இவ்விளம்பருவ வீரர்கள் தங்கள் நாட்டின் கலங்கருதிப் போர்க்களத்தில் பகைவர் படைகளை எதிர்த்துநின்று, உயிர்வழங்கும் திறம் பெற்றிருந்தார்கள். இவ்வாறு ஆண்மை மிக்க வீரர் பலரும் போர்த்துறையில் ஈடுபட்டு இறந்தமையால், ஆள்வினைக்குரிய ஆடவர் தொகை மிகவும் குறைவதாயிற்று; தம்மைத்தாமே காத்துக்கொள்ளுதற்குரிய உடல் வலி பெறாத மெல்லியலாராகிய மகளிர் தொகை மிகுவதாயிற்று. அதனால், ஆடவர் பெண்டிர் ஆகிய இரு பாலாருள் ஆண் மக்களைப் பெறுதலே நற்பேறாகக் கருதும் வழக்கம் நாட்டில் நிலைபெறுவதாயிற்று. மணம் செய்துகொண்டாருள் புதல்வர்ப் பேறுடையார் தம் முன்னோர்க்குரிய அரிய கடமையினைச் செய்துமுடித்து, வாழ்க்கை இன்பங்களை நுகர்ந்து முதிர்ந்தவராதலால், அவரைப் போரிற்கொல்லுதல் பழியுடைய செயலாகக் கருதப்படவில்லை.

கோப்பெருஞ்சோழன் உண்ணா நோன்பு மேற்கொண்டு வடக்கிருந்து உயிர்விடக் கருதியபொழுது, அவ-